/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயிலுக்கு செல்லும் பாதையில் கழிப்பிடம் பக்தர்கள் வேதனை
/
கோயிலுக்கு செல்லும் பாதையில் கழிப்பிடம் பக்தர்கள் வேதனை
கோயிலுக்கு செல்லும் பாதையில் கழிப்பிடம் பக்தர்கள் வேதனை
கோயிலுக்கு செல்லும் பாதையில் கழிப்பிடம் பக்தர்கள் வேதனை
ADDED : செப் 08, 2025 06:08 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையில் விதிகளை மீறி பேரூராட்சி நிர்வாகம் கழிப்பிடம் அமைத்து வருவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
திருப்புவனத்திற்கு தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தினசரி சந்தை, வாரச்சந்தை, மாட்டுச்சந்தை என எந்நேரமும் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் பேரூராட்சி சார்பில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை என எந்த வசதியும் இல்லாததால் திருப்புவனம் வந்துசெல்ல வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மார்கெட் வீதியில் இருந்த சுகாதார வளாகம் இடித்து அகற்றப்பட்டு அந்த இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து விட்டனர்.
இதனால் இயற்கை உபாதையை கழிக்க வியாபாரிகள், பொதுமக்கள் வைகை ஆற்றை நோக்கி படையெடுக்கின்றனர். மார்கெட் வீதியில் சுகாதார வளாகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவுகிறது.
இதனிடையே பேரூராட்சி நிர்வாகம் ஒரு நபர் தற்காலிக கழிப்பறையை சுப்ரமணிய சுவாமி கோயில் பின்புற வீதியில் அமைத்தது. இதில் கழிவுகளை நேரடியாக சாக்கடை கால்வாயில் விழும்படி அமைத்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் இப்பாதை வழியாகத்தான் சென்று வருவார்கள், மேலும் கழிப்பறை அருகே சுப்ரமணியசுவாமி கோயில், பெருமாள் கோயில், புஷ்பவனேஷ்வரர் கோயில் என மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன.
கழிப்பறையால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தற்காலிக கழிப்பறையை அகற்றி விட்டு அந்த இடத்தில் பாதையை மறைத்து நிரந்தர ஒரு நபர் கழிப்பறையை அமைத்து வருகிறது. மூன்று சக்கர வாகனங்கள் சென்று வந்த பாதையில் தற்போது இரு சக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு பாதை உள்ளது.
இப்பாதையை கடந்து சுமார் 300 வீடுகளில் குடியிருப்பவர்கள் சென்று வருகின்றனர். பாதையை மறைத்தால் மார்கெட் வீதியை சுற்றி வர வேண்டியுள்ளது.
பொதுமக்களிடம் வீடுகளில் இருந்து மனித கழிவுகளை நேரடியாக சாக்கடை கால்வாயில் விடக்கூடாது, நோய் தொற்று ஏற்படும் என வலியுறுத்திய பேரூராட்சி நிர்வாகமே கழிவுகளை சாக்கடை கால்வாயில் விழுமாறு கழிப்பறை அமைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மார்கெட் வீதியில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.