/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'‛டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டம் வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு
/
'‛டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டம் வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு
'‛டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டம் வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு
'‛டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டம் வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 06, 2024 12:13 AM
சிவகங்கை:தமிழகத்தில் 'டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்த அனைத்து வி.ஏ.ஓ.,சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களின் பெயர், அதன் தன்மை, நடவு செய்துள்ள பரப்பு, மானாவாரியா அல்லது பாசன முறையா என்பது போன்ற விபரங்களை வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வு செய்து, வருவாய்துறை அடங்கல் கணக்கில் ஏற்றுவர்.
இந்நிலையில் தமிழக அரசு, டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு செய்ய வேண்டும் என வி.ஏ.ஓ.,க்களை வற்புறுத்தி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வி.ஏ.ஓ.,விற்கும் வழங்கப்படும் மொபைல் ஆப் மூலம் நேரடியாக விவசாயி பயிரிட்டுள்ள நிலத்திற்கே சென்று, அங்கிருந்து 'மொபைல் ஆப்பை' ஆன் செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு பின் வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அடங்கல் கணக்குகளில் பயிர், பயிரிட்ட பரப்பு விபரங்களை ஏற்ற வேண்டும். இதற்கு அனைத்து வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிதாக பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களை வருவாய் துறை அதிகாரிகள், பணி வரன்முறை பாதிக்க செய்வோம் என மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து அனைத்து வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தாசில்தார் அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மாநில அளவில் 'டிஜிட்டல் பயிர் ஆய்வு' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஜன.8ல் போராட்ட முடிவு
தமிழ்நாடு அனைத்து வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.அருள்ராஜ் கூறியதாவது:
ஜன.,8 ல் வருவாய் நிர்வாக கமிஷனர் முன் வி.ஏ.ஓ.,சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அக்கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலம் போன்றே பயிர் ஆய்வு பணியை தனியாக நடத்தி, வி.ஏ.ஓ.,க்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இல்லாவிடில் டிஜிட்டல் பயிர் ஆய்வு திட்டத்தை கைவிட்டு பழைய முறையை அனுமதிக்க வலியுறுத்த உள்ளோம். அதற்கு அரசு உடன்படாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டமைப்பில் முடிவு செய்யப்படும் என்றார்.