/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏமாற்றம்: வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கைகள்
/
ஏமாற்றம்: வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கைகள்
ஏமாற்றம்: வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கைகள்
ஏமாற்றம்: வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கைகள்
ADDED : அக் 12, 2024 04:35 AM
மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய தொழில், வர்த்தக நகரான சிங்கம்புணரியை தலைமையிடமாகக் கொண்டு சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களை உள்ளடக்கிய தனித் தாலுகா 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தே இத்தாலுகா பகுதிக்கென்று பல முக்கிய கோரிக்கைகள் நிலுவையிலேயே இருந்து வருகின்றன.
குறிப்பாக சிங்கம்புணரியில் பஸ் டிப்போ அமைப்பது, பெரியாறு நீட்டிப்பு கால்வாய் முழுவதையும் சீரமைத்து அதை நிரந்தரக்கால்வாய் ஆக்குவது, எஸ்.புதூரில் தோட்டக்கலை பண்ணை அமைப்பது, வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவருவது என ஏராளமான கோரிக்கைகள் இருந்து வருகின்றன.
தனித்தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவில்லை.
தாலுகா மருத்துவமனையாக பெயர்பலகை வைத்திருந்தும் அதற்குரிய கூடுதல் கட்டட வசதி, அவசர சிகிச்சை, படுக்கை உபகரணங்கள் கூடுதலாக வரவில்லை. சிங்கம்புணரி கிளை நூலகம் தாலுகா நூலகமாக தரம் உயர்த்தப்படாமல் இன்னும் ஓட்டை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சிங்கம்புணரி, எஸ்.புதுார் மக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்கல்லூரி அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை அதற்கான அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இப்பகுதி மாணவர்கள் குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றிய மாணவர்கள் பலரின் கல்லூரி கனவு கானல் நீர் ஆகி வருகிறது. பெரியாறு நீட்டிப்புக் கால்வாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் இருந்தும் அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே சில நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மற்ற நிரந்தர கால்வாய்களோடு இக்கால்வாயையும் நிரந்தரமாக்கி ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்கும் போது இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவர். அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கால்வாய்கள் பல இடங்களில் மண்மூடியும், ஆக்கிரமிக்கப்பட்டும் வருகிறது.
ஆட்சிகள் மாறும்போது கோரிக்கைகளும், ஏமாற்றமும் மாறாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனியாவது இத்தாலுகா மக்களின் நலன் கருதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.