/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே நிலதான கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
மானாமதுரை அருகே நிலதான கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : பிப் 04, 2024 02:30 AM

மானாமதுரை,: 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு மானாமதுரை அருகே கீழப்பிடாவூரில் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழப்பிடாவூரில் கல்வெட்டு இருப்பதாக அப்பகுதி கண்ணன் மற்றும் லிங்கம் தெரிவித்ததை அடுத்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர். காளிராசா, செயலாளர் நரசிம்மன்,கள ஆய்வாளர் சரவணன் ஆய்வு செய்தனர்.
காளிராசா கூறுகையில்,''
மதுரையைச் சுற்றி சமணர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அதனை சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கை அமைந்துள்ளதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இங்குள்ள 9ம்,10ம் நுாற்றாண்டு மகாவீரர் சிலைகள் அதை செய்த அச்சனந்தி அடிகள் போன்ற விபரங்கள் வட்டெழுத்துக்கல் வெட்டாகவும் கிடைக்கின்றன. அக்காலத்தில் செய்த சிலைகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக கிடைக்கின்றன.
7,8ம் நுாற்றாண்டில் சைவர்களுக்கும், சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 10வது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது. பாண்டிய நாட்டில் 10ம் நுாற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் நிலையில் மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டு கிடைத்துள்ளது.
இதன் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது சிறப்பானதாகும். ஒருபக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் 7வரிகள் இடம் பெற்றுள்ளன. மற்ற 3 பக்கங்களிலும் எழுத்துக்கள் உள்ளன, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுதியதை கொண்டு இது 13ம் நூற்றாண்டாகக் கருதலாம்.
ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி இருந்ததை நாம் அறிய முடிகிறது.
கல்வெட்டில் கிரந்த எழுத்துக்களும் இருந்ததால் மேலாய்வுக்காக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்திடமும் வாசித்து தகவல் பெறப்பட்டது என்றார்.