/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிக்கும் பஸ் ஸ்டாப்களால் ஊழியர்களுடன் தகராறு
/
அதிகரிக்கும் பஸ் ஸ்டாப்களால் ஊழியர்களுடன் தகராறு
ADDED : டிச 17, 2024 03:58 AM
திருப்புவனம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் பஸ் ஸ்டாப்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் தினசரி பயணிகள் கண்டக்டர்களுடன் தகராறு செய்கின்றனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நடப்பதால் வடமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என பலரும் மதுரை வரை ரயிலில் வந்து அதன்பின் ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள 175 கி.மீ., துாரத்திற்கு அரசு பஸ்களில் 136 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து நான்கு மணி 15 நிமிடத்தில் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட நேரம். ஆரம்பத்தில் 36 பஸ் ஸ்டாப்கள் இருந்த நிலையில் தற்போது 41 பஸ் ஸ்டாப்புகளாக அதிகரித்துள்ளனர்.
மேலும் நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக பஸ்களை இயக்க முடியாது, பயணிகளில் பலர் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் வருவார்கள், அவர்களின் வசதிக்காக பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இரு பஸ் ஸ்டாண்ட்களிலும் தலா 15 நிமிடம் வரை பஸ்கள் நிறுத்தப்படும். மதுரையில் இருந்து சுற்றுலா பயணிகள் தவிர அரசு ஊழியர்கள், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் என பலரும் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.
மதுரை, சேலம் கோட்ட (மொத்தமே எட்டு நிறுத்தங்கள், மூன்றரை மணி நேரம்) பஸ்கள் ராமேஸ்வரத்திற்கு அதே கட்டணத்துடன் குறைந்த நேரத்தில் செல்வதால் பலரும் மதுரை கோட்ட பஸ்களை நாடி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். இதனால் காரைக்குடி கோட்ட பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் நின்று நின்று செல்வதால் பயணிகள் போக்குவரத்து கழக ஊழியர்களிடம் தகராறு செய்கின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு மட்டும் ஒன் டூ ஒன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற ரீதியில் இயக்கப்படுகின்றன.
அரசு பஸ் ஊழியர்கள் கூறுகையில், வருடத்திற்கு ஒருமுறை பஸ் ஸ்டாப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்,அதனை தவிர்த்து ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்களில் கூடுதல் பஸ் ஸ்டாப்களில் நின்று செல்ல வற்புறுத்துகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடிக்கு தனியார் பஸ்களில் 50 ரூபாய் கட்டணம், ஆனால் அரசு பஸ்களில் 63 ரூபாய் கட்டணம், அதிலும் தனியார் பஸ்களில் கட்டணமும் குறைவு, சுகாதாரமாகவும், விரைவாகவும் இயக்குகின்றனர்.
அரசின் புத்தம் புதிய பஸ்களில் கூட கதவு, ஜன்னல் திறக்க முடிவதில்லை, பழுதான டயர்களுடன் தான் இயக்க வேண்டியதுள்ளது. பஸ்களையும் பராமரிப்பதில்லை, சுத்தம் செய்வதில்லை. எல்லா நிறுத்தங்களிலும் பஸ்களை நிறுத்தினால் தொலை துாரம் பயணம் செய்யும் பயணிகள் எங்களிடம் தகராறு செய்கின்றனர் என்றனர்.