/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் அதிருப்தி
/
தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் அதிருப்தி
தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் அதிருப்தி
தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் அதிருப்தி
ADDED : பிப் 16, 2024 05:24 AM
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்திடும் நோக்கில் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது இடத்திலோ அல்லது தன்னார்வலர் இல்லத்திலோ மாணவர்களை ஒருங்கிணைத்து 1:20 என்ற விகிதத்தில் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடந்து வருகிறது.
சாக்கோட்டை வட்டாரத்தில் இந்த திட்டத்தில் 469 பேர் இதில் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லாவிட்டாலும் தன்னார்வ தொண்டிற்காக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. திட்ட பயனாளிகள் விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தில், பணி செய்த இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு இதற்கான ஊக்கத்தொகை 4 மாதங்களைக் கடந்த நிலையிலும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்பு மற்றும் ஷூ வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதில், மாணவர்களின் பாத அளவுகளை இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளர்கள் மூலம் கணக்கீடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.அதன்படி இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் மாணவர்களின் பாத அளவுகளை கணக்கெடுக்கும் பணியை தங்களது அலைபேசி செயலி மூலம் செய்து வருகின்றனர்.ஒருவர் 500 பேருக்கு அளவு எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் அனைவரும் செயலியை பயன்படுத்துவதால் நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவதோடு டேட்டா செலவும் தங்களுடையது என்று புலம்பி வருகின்றனர்.
ரூ.ஆயிரம் ஊக்கத் தொகையில் அதிகமான வேலை வாங்கப்படும் பணியாளர்களுக்கு உரிய ஊக்கத்தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம் கூறுகையில்:
இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஊக்கத்தொகை வந்திருக்கலாம். வராவிட்டால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.