ADDED : அக் 30, 2025 04:02 AM
திருப்புவனம், அக்.30-
பெத்தானேந்தல் கிராமத்தில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடுகளை ரேபிஸ் நோய் பாதித்த வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் 37 மாடுகள் காயமடைந்தன.
பெத்தானேந்தலில் கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. தினசரி கறவை மாடுகளை அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடை வளர்ப்போர் அழைத்துச் செல்வது வழக்கம், நேற்று வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அப்போது ரேபிஸ் பாதித்த நாய், மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை கடித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கறவை மாடுகள் வாயில் வடிந்த உமிழ்நீருடன் மயங்கி நின்றன. திருப்புவனம் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ், கால்நடை ஆய்வாளர் பால்கன் உள்ளிட்டோர் நடமாடும் கால்நடை மருந்தகத்தை வரவழைத்து பாதிக்கப்பட்ட கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
பெத்தானேந்தல் எம்.தண்ணாயிரம் கூறுகையில் : விவசாயம் கைவிட்ட நிலையில் கறவை மாடுகளை வைத்துதான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஏற்கனவே வெறிநாய் கடித்து கறவை மாடுகள் உயிரிழந்த நிலையில், இன்று ஒரே நாளில் 37 கறவை மாடுகளை கடித்துள்ளது.
கறவை மாடுகளுக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

