UPDATED : நவ 04, 2026 11:11 AM
ADDED : நவ 04, 2026 11:09 AM
சிவகங்கை: சிவகங்கையில் சிறப்பு சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் நவ., 12 ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிக்கான 2027 ம் ஆண்டுக்கான போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்த பணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 12 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் ஆட்சேபனையை நவ., 12 முதல் டிச., 11 வரை தெரிவிக்கலாம். இதன் மூலம் பெறப்பட்ட மனுக்கள், ஆட்சேபனை மீதான நடவடிக்கை டிச., 28 ல் நிறைவு பெறும்.
இதற்கு பின் 2027 ஜன., 4 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 2027 ஜன., 1 அன்று 18 வயது பூர்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதே போன்று 2027 ஏப்., 1, ஜூலை 1 மற்றும் அக்., 1 அன்று 18 வயது பூர்த்தியடைய உள்ளோரும் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
புதிய வாக்காளர்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். இது தவிர்த்து ‘‘ https://voters.eci.gov.in’’ இணையதளம் அல்லது ’ECINET’ செயலி மூலமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு உதவி மைய எண் 1950 ல் கேட்டு அறியலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ., பெயர் நீக்கம் அல்லது ஆட்சேபனைக்கு படிவம் 7, முகவரி மாற்றம், வாக்காளர் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல், மாற்றுத்திறனாளி என குறிப்பிட படிவம் 8 ஆகியவற்றை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
