ADDED : ஜூன் 03, 2026 11:06 PM
திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் குண்டேந்தல்பட்டியில் தொழிலாளர்கள் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் தலைமறைவாகினர்.
திருப்புத்துார் ஒன்றியம் குண்டேந்தல்பட்டியில் நான்குவழிச்சாலை பணி நடக்கிறது. இதில் ஈடுபட்ட நெய்வேலியைச் சேர்ந்த சிவக்குமார் 44, பிரபா 35, செல்வம் 35, நேற்று முந்தினம் பணிக்கு வரவில்லை. இரவு காவலர் செல்வராஜ், அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது சிவக்குமார் காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்பகுதியில் கடப்பாரை, ரத்தக்கறை படிந்த 2 மரக்கம்புகள் கிடந்தன.
டி.எஸ்.பி.,செல்வக்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் இரவு பிரபா, செல்வம் ஆகியோருடன் சிவக்குமார் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது தெரிந்தது. இந்த தகராறில் சிவக்குமார் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பிரபா, செல்வத்தின் அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
