கிராமங்களில் கேள்விக்குறியாகும் திடக்கழிவு மேலாண்மை
கிராமங்களில் கேள்விக்குறியாகும் திடக்கழிவு மேலாண்மை
ADDED : ஜூன் 03, 2026 11:25 PM

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் கிராமங்களில் மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரிப்பதுடன் அவற்றிலிருந்து உரம் தயாரிக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் ஊருக்கு வெளியே சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளில் மண்புழு மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆரம்ப காலம் தொட்டு போதிய கண்காணிப்பு இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.
பொதுவாக கிராமங்களில் குப்பையை சேகரித்து தருவது என்ற பழக்கமே இல்லை. கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள துாய்மை பணியாளர்களுக்கு அதற்குரிய உபகரணங்கள், வாகனங்கள் ஏதும் வழங்கப்படுவதில்லை .இதனால் குப்பைகளை சேகரித்து ஊருக்கு வெளியே பொது இடத்தில் கொட்டி தீ வைத்து அழித்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பழையனுார் கண்ணாரிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இதற்காக தனியாக சிமென்ட் தொட்டிகள், மேற்கூரை ஆகியவை லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.
கிராமங்களில் பிளாஸ்டிக் டம்ளர், கேரி பை, கழிவு இறைச்சி உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து இன்றளவும் தீ வைத்து அழிக்கின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
வடகரை மகேஸ்வரன் கூறுகையில், தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வே இல்லை.கோர்ட் உத்தரவிட்டும் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை தரம் பிரித்து அழிக்காமல், குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட தடுப்பணைகளில் கொட்டி மாசு படுத்தி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது.
மேலும் வடகரை விலக்கில் திரும்பும் இடத்தில் வைகை ஆற்றிலும் குப்பை கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என கோர்ட் அறிவித்தும் இன்று வரை அதிகாரிகள் அதனை கண்டு கொள்வதே இல்லை, என்றார்.
