/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வைகை ஆற்று கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மானாமதுரை வைகை ஆற்று கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 10, 2025 12:26 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மானாமதுரை நகரப் பகுதியின் நடுவே செல்லும் வைகை ஆற்றின் இரு கரை ஓரங்களிலும் ஆங்காங்கே ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். மேலும் வாரச்சந்தை அருகே இருந்த வணிக வளாகம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் கடைகளை வைத்திருந்த சிலர் எதிர்ப்புறம் வைகை ஆற்றங்கரையில் தற்காலிகமாக கடைகளை அமைத்தனர்.
மேலும் மானாமதுரை சோனையா கோயில் அருகே வைகை ஆற்றுப் பாதையிலும் ஏராளமானோர் காய்கறி கடைகள் மற்றும் பட்டரைகளையும் அமைத்த நிலையில் பல்வேறு தரப்பினர் வைகை ஆற்றங்கரை ஓரமும், ஆற்றுப்பகுதியிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார்,உதவி பொறியாளர் அமர்நாத் ஆகியோர் ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கூறியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கடைகள் வைத்திருந்த ஏராளமானோர் தாங்களாகவே கடைகளை அகற்றி வருகின்றனர்.
இது குறித்து நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் கூறியதாவது, மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றங்கரையோரம் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்த நிலையில் அதனை படிப்படியாக அகற்றி வருகிறோம் .மீதமுள்ள கடைகளையும் விரைவில் அகற்றவில்லை எனில் நீர்வளத் துறை சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வைகை ஆற்றில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை போடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

