/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
30 சதவீத தண்ணீரை கூட தேக்க முடியாமல் பாதிப்பு
/
30 சதவீத தண்ணீரை கூட தேக்க முடியாமல் பாதிப்பு
ADDED : நவ 05, 2024 05:21 AM

திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வைகை ஆற்று தண்ணீரை நம்பியே உள்ளன. வைகை ஆற்றில் நீர்வரத்து காலங்களில் வரத்து கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம்.
பிரமனூர், திருப்பாச்சேத்தி, மாரநாடு, கானுார், திருப்புவனம் என பல்வேறு கால்வாய்கள் மூலம் கண்மாய்களில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பபடுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தாமதமாக பெய்து வரும் நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழைத்தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.
மழை தண்ணீரை திருப்புவனம், பிரமனூர், மாரநாடு, பழையனூர், கானூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை தண்ணீரை வைத்து நெல் நடவு பணிகளை முடித்து விட்டு விளைச்சலுக்கு கண்மாய் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வைகை ஆற்று தண்ணீரை கொண்டு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு சென்றாலும், உடனே தண்ணீர் நிரம்பி விடுவதுபோல், காட்சி அளிக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் கண்மாய் உட்பரப்பில் காடுகள் போல் சீமை கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்புவனம் கண்மாய் 217 மில்லியன் க.அடி., கானூர் 332, பிரமனூர் 192, திருப்பாச்சேத்தி 106, பழையனூர் 190 மில்லியன் கன அடி நீர் வரை கண்மாயில் சேமிக்கலாம். ஆனால் கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாய் உட்பரப்பு காடுகளாக இருப்பதால், 30 சதவீத தண்ணீரை கூட தேக்க முடியாமல், வீணாகி வருகிறது.
கண்மாயில் கருவேல மரங்களை அகற்றவும்
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் விவசாயம் 120 முதல் 140 நாட்கள் நடக்கும். இருமுறை கண்மாய் நிறைய வேண்டும். அப்போதுதான் முழு விளைச்சல் எடுக்க முடியும். 2025 பிப்., வரை கண்மாயில் தண்ணீர் இருந்தால் தான் ஒரு போக விளைச்சலை அறுவடை செய்ய முடியும். எனவே கண்மாய் உட்பரப்பில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும், என்றனர்.