/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்பார்ப்பு பாரம்பரிய தொழு மஞ்சு விரட்டு நடக்குமா மஞ்சுவிரட்டுக்கு தனி வழிமுறைகள் வகுக்கப்படுமா
/
எதிர்பார்ப்பு பாரம்பரிய தொழு மஞ்சு விரட்டு நடக்குமா மஞ்சுவிரட்டுக்கு தனி வழிமுறைகள் வகுக்கப்படுமா
எதிர்பார்ப்பு பாரம்பரிய தொழு மஞ்சு விரட்டு நடக்குமா மஞ்சுவிரட்டுக்கு தனி வழிமுறைகள் வகுக்கப்படுமா
எதிர்பார்ப்பு பாரம்பரிய தொழு மஞ்சு விரட்டு நடக்குமா மஞ்சுவிரட்டுக்கு தனி வழிமுறைகள் வகுக்கப்படுமா
ADDED : டிச 11, 2024 07:56 AM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு பாரம்பரியம் அழிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு திணிக்கப்படுவதாக மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக தொழு மஞ்சுவிரட்டு முறையில் காளைகள் கிராமங்கள் தோறும் அவிழ்க்கப்பட்டு வந்தது. விலங்குகள் நல வாரியம் தலையிட்டு கோர்ட்டிற்கு காளைகள் விளையாட்டு வழக்காக சென்றதால் பின் நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட இடங்களில் முன்னேற்பாடு விதிகளை அறிவித்து நடத்த அரசு அனுமதிக்கிறது.
அரசிதழில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மஞ்சுவிரட்டு நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த விதிமுறைகள் அனைத்தும் ஜல்லிக்கட்டு பாணியில் நடத்தப்படும் காளை விளையாட்டிற்கு மட்டுமே பொருந்தும். எனவே மஞ்சுவிரட்டுக்கு தனி விதிமுறைகள் உருவாக்கி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக சிவகங்கை மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் அரசு தரப்பில் அந்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் மஞ்சுவிரட்டுக்கு பெயர் பெற்ற சிராவயல் பொட்டலில் மஞ்சுவிரட்டுக்கு பதிலாக ஜல்லிக்கட்டு தான் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு பாணியில் பல மணி நேரம் தொடர்ந்து காளைகள் அவிழ்க்கப்படுவதும், பல காளைகள் அதில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போவதுமாக காளை வளர்ப்போர் அதிருப்தியில் உள்ளனர்.இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் தொழு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரத் துவங்கியுள்ளனர்.
பாரம்பரிய தொழு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகி ஆறுமுகம் கூறியதாவது: ‛ ஜல்லிக்கட்டு வேறு மஞ்சுவிரட்டு வேறு. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மஞ்சுவிரட்டில் திணிப்பதால் பாரம்பரிய மஞ்சுவிரட்டு அழிந்து வருகிறது .பாரம்பரிய மஞ்சுவிரட்டு என்பது மதியம் விருந்தோம்பல் முடிந்து 2:00 மணி முதல் 5:00 மணி வரை மட்டுமே. பரிசு பொருட்கள் இல்லாமல் துண்டு மட்டுமே காளைகளுக்கு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும். தொழு வாசலில் 100 மீட்டர் தூரத்துக்கு காளைகளை பிடிக்க அனுமதி கிடையாது. காளைகள் நாலாபுறமும் ஓடி தப்பி விடும். அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்குள் மஞ்சு விரட்டு முடிந்து விடும். தற்போது பரிசு செலவு, வாடிவாசல் செலவு, தடுப்பு வேலி செலவு, பிடிவீரர்களுக்கு பனியன் ..என்று அதிக பொருட்செலவை உருவாக்கியுள்ளனர். மேலும் அவிழ்த்து விட்ட காளையை 100 அடிக்குள் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இது மஞ்சுவிரட்டு விதிக்கு எதிரானது. காளைகளுக்கு பாதுகாப்பானதல்ல. எனவே பொங்கல்,கோயில் விழாக்களில் நடத்தப்பட்டு வந்த அழிந்து வரும் தொழு மஞ்சுவிரட்டை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு,வடமாடு மஞ்சுவிரட்டு,தொழு மஞ்சுவிரட்டு,எருதுகட்டு ஆகியவை நடத்த அனுமதிக்கப்பட்டும் சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் மஞ்சுவிரட்டை ஜல்லிக்கட்டாக மாற்றி வருகிறார்கள்' என்றார்.
இந்த விதிமுறைகளால் அரசு அனுமதியில்லாமல் பல இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதும், அனுமதியில்லாமல் நடத்தியதாக கிராமத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிப்பதுமாக உள்ளது.