/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஊழியர் நியமன உத்தரவு கண்துடைப்பு சங்கங்கள் குற்றச்சாட்டு
/
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஊழியர் நியமன உத்தரவு கண்துடைப்பு சங்கங்கள் குற்றச்சாட்டு
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஊழியர் நியமன உத்தரவு கண்துடைப்பு சங்கங்கள் குற்றச்சாட்டு
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஊழியர் நியமன உத்தரவு கண்துடைப்பு சங்கங்கள் குற்றச்சாட்டு
ADDED : மார் 17, 2025 02:08 AM
சிவகங்கை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 90,000 காலிபணியிடங்களுக்கு 16,780 பேரை மட்டுமே தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யும் அரசின் அறிவிப்பு கண்துடைப்பு தான் என சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் 3886 அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி மையங்களுக்கு 305 பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் 3592 பேர் என 7783 பேரை தொகுப்பூதிய அடிப்படையில் அரசு நியமிக்க உள்ளது. இந்நேரடி பணிநியமனத்தில் வழக்கமான நடைமுறையுடன் கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதே போன்று சத்துணவு மையங்களில் 8997 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு அங்கன்வாடி, சத்துணவு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
25 சதவீத பணியிடமே நிரம்பும்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில செயலாளர் ஐ.பாக்கியமேரி கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் வேலை அளிக்கும் புதிய திட்டத்தை வரவேற்கிறோம். அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் என 25,000 காலிபணியிடம் உள்ளன. 4480 மினி அங்கன்வாடி மையங்களில் மட்டுமே 3500 காலிபணியிடம் உள்ளது. ஆனால், இங்கு 305 பேரைத் தான் நியமிக்க உள்ளனர். மாநில அளவில் சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 25 சதவீத பணியிடம் தான் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இன்னும் 75 சதவீத காலிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதனால், அரசின் இந்த நடவடிக்கையை கண்துடைப்பாக தான் ஊழியர்கள் பார்க்கின்றனர் என்றார்.
தந்தை உத்தரவை மீறிய முதல்வர்
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பி.பாண்டி கூறியதாவது: 2008 செப்.,15 உத்தரவில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தொகுப்பூதிய, மதிப்பூதிய அடிப்படை பணி நியமனத்தை ரத்து செய்து, சிறப்பு காலமுறை ஊதியத்தை கொண்டு வந்தார். ஆனால், தந்தை போட்ட உத்தரவையே மீறி தற்போது முதல்வர் ஸ்டாலின் சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர் பணிநியமன உத்தரவில் தொகுப்பூதிய முறையை கொண்டு வந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.