/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை பாசனத்தில் தண்ணீர் செல்லாத கால்வாய்கள் விவசாயிகள் விரக்தி
/
வைகை பாசனத்தில் தண்ணீர் செல்லாத கால்வாய்கள் விவசாயிகள் விரக்தி
வைகை பாசனத்தில் தண்ணீர் செல்லாத கால்வாய்கள் விவசாயிகள் விரக்தி
வைகை பாசனத்தில் தண்ணீர் செல்லாத கால்வாய்கள் விவசாயிகள் விரக்தி
ADDED : ஜன 02, 2024 05:28 AM

மானாமதுரை: மானாமதுரையில் வைகை பூர்வீக பாசன பகுதிக்கு தண்ணீர் செல்லாத கால்வாய்களால் தண்ணீர் தேங்காமல் உள்ள கிராம கண்மாய்களால் விவசாயிகள் விரக்திக்குள்ளாகி வருகின்றனர்.
வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகை பாசன பகுதிகளாக விரகனுார் மதகு அணை பகுதியிலிருந்து பார்த்திபனுார் மதகு அணை பகுதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் 87 கண்மாய்கள் உள்ளன, இதில் இடது பிரதான கால்வாய் மூலம் 28 கண்மாய்களும், வலது பிரதான கால்வாய் மூலம் 59 கண்மாய்களும் உள்ளன. இதன் மூலம் 40 ஆயிரத்து 742 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில வருடங்களாக வைகை அணையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணை நிரம்பி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையில் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இதில் சில கால்வாய்கள் துார்வரப்படாமலும், முறையாக பராமரிக்காததாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டை, தெக்கூர், புதுக்குளம், பதினெட்டான்கோட்டை உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாததால் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாயிகள் கூறுகையில், வைகை ஆறு பாசனத்தில் வலது பிரதான கால்வாய் மூலம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் கண்மாய்களுக்கு தண்ணீர் வருடம் தோறும் வந்த நிலையில் தற்போது கால்வாய் முகத்துவாரம் மேடாகி விட்டதாலும், பராமரிக்காததாலும் தற்போது வைகையில் தண்ணீர் வரும் நேரங்களில் கால்வாயில் தண்ணீர் ஏறாமல் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. முகத்துவாரத்தை தூர்வாரி கால்வாய்களை சீரமைத்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

