/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோரைப்புல் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள்
/
கோரைப்புல் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள்
ADDED : பிப் 08, 2024 06:38 AM
திருப்புவனம : திருப்புவனத்தில் கோரைப்புற்களின் விலை கிலோவிற்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் வெற்றிலை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் சோழவந்தானுக்கு அடுத்தபடியாக திருப்புவனம் பகுதி வெற்றிலையை பலரும் விரும்புவார்கள். திருப்புவனம், நயினார்பேட்டை, கலியாந்தூர், புதூர், பழையூர் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது.
நிலங்களை பாத்தி கட்டி வரப்பு தயாரித்து வெற்றிலை கத்தை கொடியை நடவு செய்கின்றனர். ஆறு மாதங்களுக்கு பிறகு கொடி படர ஆரம்பித்த பின் வெற்றிலை கொடி அருகே உள்ள அகத்தி கீரை செடிகளின் குறுக்கே கம்புகளை கட்டி அதில் வெற்றிலை கொடியை படர விடுகின்றனர்.
வெற்றிலை கொடி விழுந்து விடாமல் இருக்க கோரைப்புற்களை பயன்படுத்தி கட்டுகின்றனர். நூல், நார் உள்ளிட்டவற்றை வைத்து கட்டும்போது வெற்றிலை கொடி சேதமடையும், கோரைப்புல் என்றால் சேதமடையாது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் கோரைப்புல் உதிர்ந்து வயலில் விழுந்து விடும், மீண்டும் புதிய கோரைப்புல்லை பயன்படுத்தி வெற்றிலை கொடியை கட்டுவார்கள், ஓரு ஏக்கருக்கு ஐந்து கிலோ கோரைப்புல் கட்டு தேவைப்படும், கடந்தாண்டு வரை ஒரு கிலோ அறுபது ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில்: கோரைப்புற்கள் கருர் பகுதியில் தான் அதிகமாக விளைகிறது.அங்கிருந்து லாரிகளில் மொத்தமாக வாங்கி வந்து சங்கம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முறை வெற்றிலை கொடி பயிரிட்டால் மூன்று ஆண்டு வரை பலன் தரும், கோரைப்புற்கள் வைத்து வெற்றிலை கொடியை கட்டுவதால் அடிக்கடி வெற்றிலை கொடி விழுந்து விடும் வருடத்திற்கு இரண்டு அல்லது நான்கு முறை கோரைப்புல் வைத்து கட்ட வேண்டும்.
எனவே கோரைப்புல் தேவை அதிகம், விலை உயர்வால் வெற்றிலை விவசாயத்தில் செலவும் அதிகரித்துள்ளது, என்றனர்.

