/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நிர்வாகம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நிர்வாகம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நிர்வாகம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நிர்வாகம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : மார் 29, 2025 06:23 AM

சிவகங்கை: தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதே இல்லை என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் பிரபா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கோட்டாட்சியர் விஜயகுமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் பங்கேற்றனர்.
விவசாயிகள் விவாதம்:
ராஜா, மணல்மேடு: திருப்புவனம் தாலுகாவில் பணிபுரியும் ஆர்.ஐ.,க்களின் அரசு அலைபேசி எண் செயல்பாட்டில் இல்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கலெக்டர் : மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அனைத்து ஆர்.ஐ.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அரசு அளித்த அலைபேசியை பயன்பாட்டில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படும்.
கந்தசாமி, காளையார்கோவில்: சிவகங்கையில் இருந்து மாராத்துார், சிலுக்கப்பட்டிக்கு பஸ் சென்று வந்தது. கடந்த சில ஆண்டாக ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக கூறி, சிலுக்கப்பட்டி பஸ்சை நிறுத்தினர். தற்போது ரோடு நன்றாக இருந்தும், பஸ் வரவில்லை.
சாத்தப்பன், மறவமங்கலம்: காளையார்கோவில் அரசு மருத்துவமனை முன் ரோட்டை ஆக்கிரமித்துள்ள இறைச்சி கடைகளை அகற்ற பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கலெக்டர்: தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்துவிட்டனர். விரைந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: சிவகங்கை அரசு மருத்துவமனை முன் உள்ள கடைகளில் பாலிதீன் பைகள் புழக்கம் அதிகரித்துள்ளன. உணவு பொருட்களை சாப்பிடும் நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை கண்டு கொள்வதே இல்லை.
திருவாசகம், மாரந்தை: சாக்கூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் 2013- - 14ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த தொகையில் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் ரூ.58 லட்சம் வரை நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது வரை நடவடிக்கை இல்லை.
கன்னியப்பன், இளையான்குடி: இளையான்குடியில் உழவர் சந்தை அமைத்து, தினமும் அப்பகுதியில் விளையும் காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: இளையான்குடியில் உழவர் சந்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜேந்திரன், இளையான்குடி: விவசாய மின் இணைப்பு கேட்டு, கடந்த 2 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகையாக ரூ.200 கோடி வரை கட்டினர். ஆனால், காப்பீடு தொகை ரூ.1.5 கோடி மட்டுமே வழங்கினர். எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க செய்ய வேண்டும்.
விஸ்வநாதன், சிவகங்கை: காவிரி, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடின்றி, கிடப்பில் போட்டுள்ளனர். இதற்கு அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.