/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர் இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கீட்டில் குளறுபடி விவசாயிகள் புகார்
/
பயிர் இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கீட்டில் குளறுபடி விவசாயிகள் புகார்
பயிர் இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கீட்டில் குளறுபடி விவசாயிகள் புகார்
பயிர் இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கீட்டில் குளறுபடி விவசாயிகள் புகார்
ADDED : செப் 28, 2024 06:42 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கீடு செய்ததில், குளறுபடி இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கிணறு, மானாவாரியாக விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு (2023 --2024) மாவட்ட அளவில் 521 வருவாய் கிராமத்தில் 60,000 எக்டேரில் நெல் நடவு செய்த விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.461 வீதம் பிரீமிய தொகை செலுத்தினர். இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ரூ.7.40 கோடி வரை பிரீமிய தொகை கட்டியிருந்தனர்.
பயிர் இன்சூரன்ஸ் வழங்குவதற்காக புள்ளியியல், வேளாண்மை, வருவாய் துறை நடத்திய ஆய்வின் முடிவுபடி 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த 14,101 விவசாயிகளுக்கு ரூ.1.16 கோடி பயிர் இன்சூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சிய வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை வரவில்லை என வேளாண்மை துறையில் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவு செய்த விவசாயிகள், பயிர் இன்சூரன்ஸ் தொகை கணக்கிடுவதில் குளறுபடி ஏற்படுவதால் தான், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்சூரன்ஸ் தொகை வராமல், புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
திருப்புவனம், மணல்மேடு ராஜா கூறியதாவது: மாவட்ட அளவில் 521 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பிரீமிய தொகையாக ரூ.7.40 கோடி வரை கட்டியுள்ளனர். ஆனால், வெறும் 27 வருவாய் கிராமங்களில் மட்டுமே கணக்கீடு நடத்தி, அக்கிராமங்களை சேர்ந்த 14,101 விவசாயிகளுக்கு ரூ.1.16 கோடி மட்டுமே வழங்கி, மற்ற வருவாய் கிராம விவசாயிகளை புறக்கணித்துள்ளனர். எனவே பயிர் விளைச்சலை கணக்கீடு செய்வதில் உள்ள குளறுபடியை நீக்கி, பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளின் நிலங்களில் விளைச்சல் பாதித்த பகுதிக்குரிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும், என்றார்.
அரசுக்கு பரிசீலனை
வேளாண் உதவி இயக்குனர் (இன்சூரன்ஸ்) காளிமுத்து கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் புதிய அரசாணை படி, வருவாய் கிராமம் வாரியாக கணக்கீடு செய்து, பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியுள்ளது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் இன்சூரன்ஸ் தொகையை இழப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதென கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார். இங்கு மட்டுமின்றி புதிய கணக்கீட்டால், ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள், என்றார்.