/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பவர் டிரில்லர் வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
/
பவர் டிரில்லர் வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
பவர் டிரில்லர் வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
பவர் டிரில்லர் வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : செப் 13, 2025 02:08 AM

சிவகங்கை:திருப்புவனம் விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் வழங்குவதாகக் கூறி, தலா ரூ.1.30 லட்சம் பெற்று ஏமாற்றி வரும் விற்பனையாளர் குறித்து சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத்திடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
சிவகங்கை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் மூலம், வாழை, தென்னை நடவு செய்துள்ள விவசாயிகள் உழவு மேற்கொள்ள 50 சதவீத மானிய விலையில் பவர் டிரில்லர் வழங்கப்படும் என தெரிவித்தனர். தோட்டக்கலைத்துறையில் 40 மிஷின்கள் விவசாயிகளுக்கு வழங்க பரிந்துரை செய்தனர். மானியம் போக விவசாயிகள் பங்கு தொகையாக தலா ரூ.1.30 லட்சம் வரை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் காசோலையாக ஒப்படைத்து, அனுமதி கடிதம் பெற்ற பின்னரே, அரசு அனுமதித்த ஒப்பந்ததாரரிடம் பவர் டிரில்லர் இயந்திரத்தை விவசாயிகள் பெற வேண்டும்.
கடந்த ஆண்டிற்கான பவர் டிரில்லர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, அரசு வேறு நபருக்கு வழங்கிவிட்டது. ஆனால், தனக்கு தான் ஒப்பந்தம் கிடைக்கும் என உறுதி அளித்து மணலுார், சிவகங்கையில் உள்ள பவர் டிரில்லர் மிஷின் விற்பனையாளர் தோட்டக்கலை துணை இயக்குனரிடம் அனுமதி கடிதத்தை பெற்று விட்டார்.
இந்த கடிதத்தை விவசாயிகளிடம் காண்பித்தே பலரிடம் பங்கு தொகை ரூ.1.30 லட்சம் வரை வசூலித்து விட்டார். ஆனால், ஓராண்டு முடிந்தும் விற்பனையாளர் பணத்தையோ, மிஷினையோ தராமல் விவசாயிகளை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து திருப்புவனம் விவசாயிகள் சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத்திடம் நேற்று புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
30 விவசாயிகளை ஏமாற்றி பணம் பறிப்பு வில்லியரேந்தல் விவசாயி அய்யம்போஸ் கூறியதாவது: பவர் டிரில்லர் மி ஷினை மானியத்தில் பெற்றுத்தருவதாக கூறி, தனியார் விற்பனையாளர் அவரது கம்பெனி பெயரில் பில் தயாரித்து தலா ரூ.1.30 லட்சம் பங்கு தொகைக்கான பில்லை கொடுத்துள்ளார். ஆனால், இது வரை மி ஷின் அல்லது பணத்தை வழங்காமல் ஏமாற்றி வருகிறார். இது போன்று திருப்புவனம் தாலுகாவில் மட்டுமே 30 விவசாயிகளிடம் பணத்தை பெற்று ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளோம், என்றார்.
விவசாயிகளை ஏமாற்றிய விற்பனையாளர் தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறியதாவது: சிவகங்கையை சேர்ந்த விற்பனையாளருக்கு, அரசு பவர் டிரில்லர் மி ஷின் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கவில்லை. அதற்கு முன் தனக்கு தான் அந்த ஒப்பந்தம் கிடைக்கும் என அப்போதிருந்த தோட்டக்கலை துணை இயக்குனரிடம் உறுதி அளித்து, அவரது அனுமதி கடித்தை பெற்றுவிட்டார். அந்த கடிதத்தை காண்பித்து தான் விவசாயிகளிடம் பணம் வசூலித்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின்படி, தமிழக அளவில் பவர் டிரில்லர் மி ஷின் வழங்கும் சிவகங்கை விற்பனையாளருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.
தோட்டக்கலைத்துறையில் பங்கு தொகையை செலுத்திய விவசாயிகள் 29 பேருக்கு பவர் டிரில்லர் மிஷின் வழங்கி விட்டோம். நேரடியாக விற்பனையாளரிடம் பணத்தை கொடுத்த விவசாயிகள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர், என்றார்.