/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பனிக்கனேந்தலில் 220 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
/
பனிக்கனேந்தலில் 220 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
பனிக்கனேந்தலில் 220 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
பனிக்கனேந்தலில் 220 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ADDED : டிச 11, 2025 05:40 AM

சிவகங்கை: பனிக்கனேந்தலில் 220 ஏக்கர் அரசு புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். கலெக்டர் பி.ஏ.,( வேளாண்மை) தனலட்சுமி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியபிரியா, உதவி இயக்குனர் தர்மர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ராஜேந்திரன், இளையான்குடி: 'டாப்செட்கோ' (தமிழ்நாடு பின்தங்கியவர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம்) திட்டத்தில் போர்வெல் அமைத்து கொடுத்து 3 ஆண்டுகளாகியும் 116 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை.
கிருஷ்ணதேவர், மானாமதுரை: சிப்காட் வளாகத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை செயல்பாடின்றி கிடக்கிறது. மதுரை - பரமக்குடி, கமுதி பஸ்கள் மானாமதுரை அண்ணாத்துரை சிலை வழியாக செல்வதில்லை. மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்கின்றனர்.
கோபால், பொன்னாங்கால்: பருத்திக்கண்மாய் பகுதி விவசாய நிலங்கள் நீர்பிடிப்பு பகுதியில் இருப்பதாக வருவாய் ஆவணங்களில் தெரிவிப்பதால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
டி.ஆர்.ஓ.,செல்வசுரபி: இது போன்ற நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அத்துறை ஐ.ஜி., பத்திர பதிவு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பா.ராஜா,லாடனேந்தல்: ரூ.19 கோடியில் கட்டிய லாடனேந்தல் பாலத்தை இணைக்கும் விதத்தில் கண்மாய் கரை ஓரம் இருந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
திட்ட இயக்குனர் : மாவட்ட அளவில் 4 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு கிராமப்புற சாலைகள் உள்ளன. இதில், 1,500 கி.மீ., துார ரோடு மட்டுமே தரமானதாக உள்ளது. எஞ்சிய ரோடுகள் படிப்படியாக புதுப்பிக்கப்படும். அரசே ஆண்டிற்கு 300 கி.மீ., ரோட்டை புதுப்பிக்கத்தான் நிதி ஒதுக்குகிறது.
போஸ், காளையார்கோவில்: புல்லுக்கோட்டை கண்மாய் மராமத்து செய்ய ரூ.12 லட்சத்திற்கு டெண்டர் விட்டனர். ஆனால், அதில் ரூ.5 லட்சம் பணிகள் கூட நடக்கவில்லை. ரேஷன் கடை இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
கலெக்டர்: சேதமான ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை கண்டறிந்து அவற்றிற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரபாண்டி, மானாமதுரை: பனிக்கனேந்தல் கிராமத்தில் கண்மாய் நீர்வரத்து பாதைக்கும், மேய்ச்சல் நிலங்களாக அரசுக்கு 220 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். மேய்ச்சல் நிலத்தை அரசு மீட்க வேண்டும்.
மாணிக்கவாசகம், கட்டிக்குளம்: மாவட்ட அளவில் உள்ள கண்மாய், ஊரணி உட்பட அனைத்து நீர்நிலைகளையும் துார்வாரி, நிலத்தடி நீரை சேகரிக்க வேண்டும்.
ராம.முருகன், மானாமதுரை: செய்களத்துாரில் வனத்துறையினர் துவக்கிய நாற்றாங்கால் பண்ணையை சுந்தரநடப்பிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிஹரன், சாக்கோட்டை: நகை அடமானத்தின் பேரில் கிராமிற்கு தேசிய வங்கிகள் ரூ.9,500 வரை தருகின்றனர். ஆனால், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.5,600 மட்டுமே தருகின்றனர். இத்தொகையை அதிகரிக்க வேண்டும்.
ராஜேந்திர பிரசாத், இணை பதிவாளர்: நகை கிராமிற்கு அதிகபட்சம் ரூ.6,000 வரை வழங்க உத்தரவிட்டுள்ளோம். இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றால் கூட்டுறவு பதிவாளரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஜோசப், கண்ணங்குடி: அனுமந்தக்குடி முதல் கீரணி வரை மணிமுத்தாறு ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.
கலைவாணி, சிங்கம்புணரி: சிங்கம்புணரி நகரில் 2,000 க்கும் மேற்பட்ட கோயில் காளைகள் திரிகின்றன. இதனால் மக்கள், விவசாய பயிர்கள் பாதிப்பை சந்திக்கிறது.
ராஜேந்திரன், சாலைக்கிராமம்: மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2 ஆயிரம் கணக்காளர்கள் உள்ளனர். வங்கிக்கென தனி கட்டடம், காம்பவுண்ட் சுவருடன் இருந்தும் ஏ.டி.எம்., மையம் அமைக்கவில்லை.
சாத்தப்பன், காளையார்கோவில்: பெரியகிளுவச்சி அதன் சுற்றுப்புற கிராமங்களில் நெல் விளைச்சல் பாதித்துள்ளன. இளையான்குடி பைபாஸ்ரோட்டில் செல்வி நகருக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டனர்.
கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: சிவகங்கை அரசு மருத்துவமனை பின் உள்ள கண்மாய்களில் மருத்துவ கழிவு கொட்டிக்கிடப்பதால், அப்பகுதி கண்மாய்களில் கழிவு நீர் சேகரமாகி நிலத்தடி நீரை பாதிக்க செய்கிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

