/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குத்தகை நிலத்திற்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை
/
குத்தகை நிலத்திற்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 02, 2025 04:03 AM
திருப்புவனம் : மாவட்டம் முழுவதும் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வைகை பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.
வருடத்திற்கு நான்காயிரம் ஹெக்டேரில் நெல், 500 ஹெக்டேரில் வாழை, 200 ஹெக்டேரில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. மற்ற விவசாயத்தை காட்டிலும் வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்டவைகள் நில உரிமையாளர்களான விவசாயிகள் பயிரிடுவதுடன் குத்தகைக்கு வாங்கியும் விவசாயிகள் பயிரிடுகின்றனர். வெற்றிலை விவசாயம் ஐந்து விவசாயிகள் வரை கூட்டு சேர்ந்து பயிரிடுகின்றனர். விவசாய நிலங்கள் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை குத்தகை காலமாக நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
கடும் வறட்சி, மழை, வெயில், காற்று , நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் விவசாயம் பாதிக்கப்படும் போது இழப்பீடு பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன. நிலம் யாருடைய பெயரில் பட்டா உள்ளதோ அவருக்குதான் இழப்பீடு கிடைக்கும், ஆனால் குத்தகைக்கு வாங்கி பயிரிடும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு சேதம் ஏற்பட்டாலும் நஷ்ட ஈடு கிடைப்பதில்லை.
பழையூர் கண்ணன் கூறுகையில் : கடந்த சில வருடங்களாக வேளாண் அதிகாரிகள் யாரும் விவசாயத்தை பார்வையிட வருவதே இல்லை. நெல், வாழை, வெற்றிலை பயிரிட்டுள்ளேன், நிலங்களை குத்தகைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகிறேன், விவசாயத்தில் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைப்பதில்லை. வெற்றிலைக்கு மூன்று லட்ச ரூபாயும், வாழைக்கு ஒரு லட்ச ரூபாயும், நெல்லுக்கு 40 ஆயிரம் ரூபாயும் செலவு செய்கிறோம், ஆனால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைப்பத்தில்லை. களப்பணியாளர்கள் ஆய்விற்கு வந்தால் இழப்பீடு கிடைத்திருக்கும், என்றார்.
மாவட்டம் முழுவதும் இதே பிரச்னை எழுந்துள்ளது. நேரடியாக விவசாயம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைப்பதில்லை. இதனால் பலரும் குத்தகைக்கு நிலம் வாங்கி பயிரிட யோசனை செய்து வருகின்றனர்.