/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இழப்பீடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
/
மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இழப்பீடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இழப்பீடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இழப்பீடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 08:00 AM

சிவகங்கை : மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சிவகங்கையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், சிவகங்கை கோட்டாட்சியர் விஜய குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
விஸ்வநாதன், இந்திய கம்யூ., சிவகங்கை: பன்றி, மான், காட்டு மாடு, பறவைகள் பயிர்களை அழிக்கின்றன. இதற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
கலெக்டர்: விலங்கினங்களால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க, 'சோலார் பென்சிங்' அமைக்க மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம். பன்றிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: வைகை ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
கலெக்டர்: வைகை ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து டிஜிட்டல் சர்வே மூலம் ஆய்வு செய்துள்ளோம். ஆக்கிரமிப்பு அகற்றப்படும். வைகை ஆற்றிற்குள் கழிவு நீர் விடுவதை தடுக்க மானாமதுரை நகராட்சி, ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
பாரத்ராஜா, திருப்புவனம்: திருப்புவனம், கழுகேர்கடை கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ராம.முருகன், மானாமதுரை: மானாமதுரை போலீஸ் ஸ்டேஷன், கோவில் தெருவில் மாடுகள் படுத்து கிடப்பதால் வாகன விபத்து நேரிடுகிறது. நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
எம்.சந்திரன், இந்திய கம்யூ., சிவகங்கை: காளையார்கோவில் தாலுகாவில் உள்ள அலுவலகங்களுக்கு வர மானாமதுரை- புளியங்குளம் வழியாக காளையார்கோவிலுக்கு பஸ் இயக்க வேண்டும்.
கருப்பையா, செங்குளிபட்டி: கிராம வயல்களில் காட்டு மாடுகள் புகுந்து, நெற்பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுமாடுகளை பிடிக்க வேண்டும்.
ஆர்.எம்., சேதுராமன், பிரவலுார்: நகரம்பட்டி கண்மாயில் உள்ள 3 மடைகளும் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைத்தால் மட்டுமே மழைநீர் சேகரமாகும்.
விஸ்வநாதன், இந்திய கம்யூ., சிவகங்கை: காவிரி - வைகை- குண்டாறு திட்டத்திற்கு ரூ.1753 கோடி ஒதுக்கீடு செய்தனர். இன்னும் சிவகங்கை மாவட்டத்தில் இப்பணிகளை துவக்கவில்லை. அரசை வலியுறுத்தி இத்திட்டத்தை செயல்படுத்திடவேண்டும்.
கலெக்டர்: முதற்கட்டமாக திருச்சி காவிரி ஆற்றில் இருந்து புதுக்கோட்டை வரை இணைப்பு கால்வாய் பணியை செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக சிவகங்கையில் பணிகள் துவங்கும்.
சாத்தப்பன், காளையார் கோவில்: காளையார் கோவில் அரசு மருத்துவமனை, பொதுப்பணித்துறை விடுதி முன் ரோட்டை ஆக்கிரமித்து இறைச்சி கடைகள் வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பில் உள்ள இக்கடைகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர்: தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ரோட்டோர ஆக்கிரமிப்பு கடை அகற்றப்படும்.
போஸ், புல்லுக்கோட்டை: விவசாய குறைதீர் கூட்டத்தில் வழங்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் பதில் அளிப்பதே இல்லை. பல ஆண்டாக இதை தெரிவித்து வருகிறேன்.
ராஜா, அ.தி.மு.க., மணல்மேடு: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் வணிக வளாகம் கட்டி திறந்தும், பயன்பாட்டிற்கு வரவில்லை.
கலெக்டர்: டெண்டர் காலம் முடியாததால் கடைகளை வணிக வளாகத்திற்கு மாற்ற முடியாமல் இருப்பதாக ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாரத்ராஜா, திருப்புவனம்: கானுார் - பிரமனுார் இடையே படுகணை கட்ட நிதி ஒதுக்கினர். 1 லட்சம் கன அடி தண்ணீர் சென்றாலும் படுகணை தாக்கு பிடிக்கும் விதத்தில் தரமாக கட்ட வேண்டும்.
ராஜேந்திரன், இளையான்குடி: இளையான்குடி பகுதியில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
எஸ்.குருமணி, துணை இயக்குனர், தோட்டக்கலை துறை: காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை ஆகிய தாலுகாவில் 2,800 எக்டேரில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்திருந்தனர்.
அதில் மழைக்கு பாதிக்கப்பட்ட 2,400 எக்டேர் நிலங்களில் அளவீடு செய்துவிட்டோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

