/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
/
மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 26, 2025 07:02 AM
திருப்புத்துார்: நமது முன்னோர்கள் கிராமங்களில் மனிதர்களின் உணவிற்காக நன்செய், புன்செய் நிலங்கள் விவசாயத்திற்கான பாசன வசதிக்கு கண்மாய்களை உருவாக்கினர். இந்த விவசாய நடைமுறை பல நுாற்றாண்டுகளாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
அது போல கால்நடைகள், வன உயிரினங்களின் உணவிற்காக பயன்படும் வகையில் உருவாக்கியது தான் மேய்ச்சல் நிலம். மழை காலத்தில் பசுமையாகவும் கோடை காலத்தில் வறண்டும் காணப்படும். கிராமங்களில் மேடான பகுதியில், பொதுவான இடத்தில் இருக்கும். கிராமத்திலுள்ள கால்நடைகள் இந்த மேய்ச்சல் நிலத்தில் தான் மேய்க்கப்படும்.
கால்நடைகளுக்கு மட்டுமின்றி மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி ஒரு பெரும் பல்லுயிர் சூழலே இயங்கும்.
ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், தவளை இனங்கள், பாம்பு போன்ற ஊர்வன, அணில் போன்ற விலங்குகள், பறவைகள் என்று பல்லுயிரினங்கள் வாழ்விடமாகவும் இருந்தன.
குடிமராமத்திலிருந்து அரசு பராமரிப்பிற்கு கண்மாய்கள் மாற்றப்பட்டன. அப்போது மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கத் துவங்கியது. மேய்ச்சல் நிலத்தின் பயன்பாடு தெரியாமல் உதவாத பகுதிகள் (Waste Land) என்று அரசுக் குறிப்பில் எழுதத்துவங்கினர்.
சுதந்திரத்திற்கு பின்பும் அதைப் பின்பற்றி புறம்போக்கு நிலம், தரிசு நிலம் என்ற பெயர் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அனுபவ பாத்தியம் ஏற்பட்டதாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கும் நடைமுறையால் மேய்ச்சல் நிலம் சுருங்கத் துவங்கியது.
கிராமத்தினர் பலரும் கூறுகையில், 50 ஆண்டுகளில் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிப்பதும், தனியாருக்கு பட்டா வழங்குவதாலும் நிலம் குறைந்து வருகிறது. விவசாயத்திற்கு பட்டா வாங்கி விட்டு விற்பதையும், வேறு பயன்பாட்டிற்கு செல்வதையும் அரசு தடுக்கவும் முடியவில்லை. இருக்கும் மேய்ச்சல் நிலங்களையாவது பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்கின்றனர்.
குறைந்து வரும் மேய்ச்சல் நிலத்தால் கால்நடை மேய்க்கும் வழக்கமும் மறைந்து வருகிறது. இருக்கும் கால்நடைகளும் மேய்ச்சல் நிலங்களில் போதிய பசுமை இன்றி குடியிருப்பு பகுதியில் உலாவுகின்றன.
இதனால் திருப்புத்துார் கிராமங்களில் வீடு தோறும் கால்நடை வளர்ப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கண்மாய்களை பராமரித்து பாதுகாப்பது போல கிராமங்களில் தற்போது உள்ள மேய்ச்சல் தரைகளையும், மந்தை நிலத்தையும் அளவீடு செய்து எல்லைக்கற்களிட்டு அடையாளம் காட்டி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
திருப்புத்துார் ஒன்றிய கிராமங்களில் குறைந்து வரும் மேய்ச்சல்,மந்தை நிலங்களால் கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது. மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.