/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூடுதல் மழைமானி விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கூடுதல் மழைமானி விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 18, 2025 05:19 AM
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் மழை அளவை சரியாக கணிக்க கூடுதல் இடங்களில் மழை மானி பொருத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா மற்றும் கோடை விவசாயம் மூலம் நான்காயிரத்து 100 எக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை, கோடை மழை ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்ப விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
திருப்புவனம் தாலுகாவில் மழை அளவை கணக்கிட அரசு மருத்துவமனையில் ஒரு மழை மானியும், வட்டார வேளாண் அலுவலக வளாகத்தில் தானியங்கி நவீன மழை மானியும் பொருத்தப்பட்டுள்ளது. திருப்புவனம் நகரில் பெய்யும் மழை அளவை கணக்கிட்டு தான் ஒட்டு மொத்த தாலுகாவிலும் மழை அளவு குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருப்புவனம் நகரில் பெய்யும் மழை கிராமப்புறங்களில் பெய்வது கிடையாது. இதனால் விவசாய பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
திருப்புவனம் தாலுகாவில் மூன்று பிர்க்காக்களை சேர்த்து 154 கிராமங்கள் உள்ளன.இதில் ஓடாத்துார் 15 கி.மீ., திருப்பாச்சேத்தி 12 கி.மீ,, காஞ்சரங்குளம் 18 கி.மீ., துாரத்தில் உள்ளது. விவசாய பணிகளுக்கு மழை அளவை கணக்கிட்டு விதை நெல், உரம், மருந்து உள்ளிட்டவைகள் ஒதுக்கப்படுகிறது. திருப்புவனம் நகரில் உள்ள இரண்டு இடங்களிலுமே மழை அளவு வேறுபடும் போது சுற்றுவட்டார கிராமங்களிலும் வேறுபட வாய்ப்புள்ளது. மற்ற தாலுகாக்களில் கூடுதல் இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ள போது திருப்புவனம் பகுதிகளிலும் கூடுதலாக மழை மானி பொருத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.