/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கால்நடை மருத்துவமனை விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
திருப்புவனத்தில் கால்நடை மருத்துவமனை விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருப்புவனத்தில் கால்நடை மருத்துவமனை விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருப்புவனத்தில் கால்நடை மருத்துவமனை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 27, 2025 04:06 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்கள் இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் கணக்கன்குடி, மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, அல்லிநகரம், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, கோழி, கறவை மாடு, எருமை மாடு உள்ளிட்டவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், பூவந்தி, கொந்தகை, அல்லிநகரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டாலும் ஐந்து டாக்டர்கள் மட்டுமே உள்ளதால் சுழற்சி முறையில் மற்ற மருந்தகங்களுக்கு சென்று வருகின்றனர்.
கறவை மாடுகளுக்கு அதிகாலையில் சினை ஊசி மற்றும் ஒருசில நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும், ஆனால் தினசரி கறவை மாடுகளை அழைத்து வந்து கால்நடை மருந்தகங்களில் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
கொந்தகையில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு மாடுகளை ஐந்து கி.மீ., துாரம் அழைத்துச் செல்ல வேண்டும். வாகனங்களில் அழைத்து சென்றால் கூடுதல் செலவாகும். ஒரு கறவை மாட்டிற்கு தினசரி 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும், பால் கறந்தாலும் இல்லாவிட்டாலும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, இதில் நோய் தாக்கினால் சிகிச்சைக்கும் அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.
கீழடியில் கால்நடை மருந்தகங்கள் இருந்தால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
கடந்த 25 வருடங்களாக திருப்புவனம் வட்டாரத்தில் ஏழு கால்நடை மருந்தகங்கள் மட்டுமே உள்ளன. 1999ல் திருப்புவனம் வட்டாரத்தில் 54 ஆயிரத்து 124 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2024ல் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 824 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்த நிலையில் அதற்கு ஏற்ப மருந்தகங்கள் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார் ஆகிய இரு இடங்களில் மட்டுமே கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. கால்நடை வளர்ப்பு அதிகளவில் உள்ள திருப்புவனத்தில் கால்நடை மருத்துவமனை தொடங்கினால் கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட கூடுதலாக கிடைக்கும், எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் வட்டாரத்தில் கூடுதல் மருந்தகங்கள், மருத்துவமனை தொடங்க வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.