/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் பயிர் கடன் தாமதம் விவசாயிகள் குமுறல்
/
இளையான்குடியில் பயிர் கடன் தாமதம் விவசாயிகள் குமுறல்
இளையான்குடியில் பயிர் கடன் தாமதம் விவசாயிகள் குமுறல்
இளையான்குடியில் பயிர் கடன் தாமதம் விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 07, 2025 04:08 AM
இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் துணை முதல்வர் உதயநிதி வரும்போது தான் பயிர் கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் அதற்குள் பயிர்கள் கருகிவிடும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமம்,கோட்டையூர், நகரகுடி,அண்டக்குடி உள்ளிட்ட இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் உரம்,பயிர்,நகை, கால்நடை உள்ளிட்ட கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வருடம் தோறும் ஆக.செப்., மாதங்களில் வழங்கப்படும் பயிர் கடன் வழங்க விண்ணப்பம் செய்தால் அதனை வழங்காமல் தற்போது வரை இழுத்தடிப்பதால் விவசாய பணிகளில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாய சங்க நிர்வாகி கல்வெளிபொட்டல் தங்கபாண்டியன் கூறியதாவது:
இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கோட்டையூர் உள்ளிட்ட சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அதனை வழங்காமல் கால தாமதம் செய்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதமே வழங்க வேண்டிய பயிர் கடனை தற்போது வரை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வரும் போது நடைபெறும் அரசு விழாவில் பயிர் கடன் வழங்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். அதற்குள் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும் சூழ்நிலை உள்ளது. ஆகவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக பயிர் கடனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரி கூறியதாவது:
இளையான்குடியில் முதல் கட்டமாக பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு விட்டன. புதிதாக விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கும் விடுபட்டு போனவர்களுக்கும் ஆவணங்கள் சரி செய்யப்பட்டு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

