/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 19, 2024 05:35 AM
திருப்புவனம்: வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகை ஆற்றின் உபரி நதியான கிருதுமால் நதி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருப்புவனம் தாலுகா வழியாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம கண்மாய்கள் வழியாக ராமநாதபுர மாவட்டம் கமுதி குண்டாற்றில் சென்று சேர்கிறது.
மதுரையின் சாக்கடை கிருதுமால் நதியில் விடப்பட்டதால் கிருதுமால் நதி மாசடைந்து பயன்பாடின்றி கிடந்தது. இதனையடுத்து மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து வெள்ளக்கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால் நதியில் இணைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 80கி.மீ., துாரமுள்ள இந்த நதியில் 2013ல் 93 கோடி ரூபாய் செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை துார் வாரியது. இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய், விருதுநகர் மாவட்டத்தில் 31 கண்மாய், ராமநாதபுர மாவட்டத்தில் 3 கண்மாய்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின் பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால் கால்வாயில் ஆங்காங்கே கருவேல மரங்களும், நாணல்களும் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக வந்த மழை தண்ணீர் கூட கிருதுமால் நதியில் செல்லவில்லை. தண்ணீர் விரைவாக செல்வதற்கு வசதியாக மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து ஐந்தரை கி.மீ., தூரத்திற்கு 55 அடி அகலத்தில் சிமென்ட் தொட்டி போன்ற நவீன அமைப்பும் மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
ஆனால் அதிலும் கருவேல மரங்கள் வளர்ந்ததால் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது பூர்வீக வைகை பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற பகுதிகளுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்தால் ஓரளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புண்டு. விருதுநகர் மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் போதிய மழை இல்லாத நிலையில் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.