/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கண்மாயில் மடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
/
மானாமதுரை கண்மாயில் மடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
மானாமதுரை கண்மாயில் மடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
மானாமதுரை கண்மாயில் மடை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 13, 2024 04:23 AM
மானாமதுரை: மானாமதுரை கண்மாயில் 20 வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் வந்ததை தொடர்ந்து விவசாயத்திற்காக மடை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மானாமதுரை கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து வரும் கால்வாய் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும், கண்மாய்க்கு தண்ணீர் வராத காரணத்தினாலும் கண்மாய் பாசன விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். சில விவசாயிகள் மட்டும் கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் மானாமதுரை கண்மாய் பாசன சங்க விவசாயிகள் மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கட்டிக்குளம் மதகணை வலது பிரதான கால்வாயிலிருந்து பிரியும் மானாமதுரை கால்வாயை துார் வாரப்பட்டது.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மானாமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வந்த நிலையில் கண்மாயில் உள்ள மடைகளை மராமத்து செய்யாத காரணத்தினால் கண்மாய் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. பாசன சங்க நிர்வாகிகள் கண்மாயில் உள்ள ஒரு மடையை 20 வருடங்களுக்குப் பிறகு விவசாயத்திற்காக திறந்து விட்டனர்.
பாசன சங்க நிர்வாகி தங்கராஜ் கூறுகையில், இக்கண்மாயில் தண்ணீர் தேங்காத காரணத்தினால் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
கடந்த 20 வருடங்களாக மானாமதுரை கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் இந்த வருடம் கால்வாய் துார்வாரப்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் ஒரு மடை மட்டும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கண்மாயில் உள்ள நீர் இருப்பு குறைந்துள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் மானாமதுரை கால்வாயில் தண்ணீர் திறந்து கண்மாய் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.