/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைக்கோலுக்கு விலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
/
வைக்கோலுக்கு விலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
வைக்கோலுக்கு விலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
வைக்கோலுக்கு விலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
ADDED : ஜன 20, 2024 04:51 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் ஈரமான வயல்களில் அறுவடை செய்யப்படும் வைக்கோல் சேதமடைவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக வயல்கள் இன்னமும் ஈரமாக உள்ளன.
மேலும் கலியாந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வரத்து கால்வாய்கள் தூர் வாரப்படாததால் கால்வாய் தண்ணீர் அறுவடைக்கு தயாரான வயல்களில் புகுந்து நெற்கதிர் சாய்ந்து வருவதால் செயின் வண்டி மூலம்தான் நெல் அறுவடை நடைபெறுகிறது.
செயின் வண்டி மூலம் அறுவடை செய்யப்படும் போது வைக்கோல் முழுமையாக வெளியே வராமல் துண்டு துண்டாக வெளியே வருவதால் மாடுகள் அதனை உண்பதில்லை. இதனால் வியாபாரிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் வைக்கோலை வாங்க மறுக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து அறுவடை காலங்களில் கேரளாவில் இருந்து வியாபாரிகள் வைக்கோலை வாங்கி செல்வது வழக்கம்.
செயின் வண்டி மூலம் அறுவடை நடந்தால் அந்த வைக்கோலை வாங்க மறுக்கின்றனர். இயந்திரம்மூலம் வைக்கோலை கட்டுகளாக சுருட்டவும் முடிவதில்லை.
விவசாயி மணி கூறுகையில், ஒரு ஏக்கர் வைக்கோல் தட்டுப்பாட்டை பொறுத்து நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகும், நெல் அறுவடை தொடங்கிய உடன் வியாபாரிகள்வைக்கோல் சுற்றும் இயந்திரத்துடன் வந்து வைக்கோலை வாங்கி செல்வார்கள்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறுவடை தொடங்கியுள்ள நிலையில் வைக்கோல் வாங்க யாருமே வரவில்லை. செயின் வண்டி மூலம் அறுவடை நடப்பதால் வைக்கோல் துண்டு துண்டாகி விழுகிறது.
வயல்களும் இன்னமும் ஈரப்பதமாகவே இருப்பதால் வைக்கோல் சேகரிக்கவே முடியவில்லை.
மழை ஈரத்துடன் இரவு முழுவதும் பனிப்பொழிவு இருப்பதால் வயல்களில் உள்ள ஈரம் காயவே இல்லை. எனவே வைக்கோலும் விலை போகவில்லை.