/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : செப் 03, 2024 06:22 AM

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தண்ணீரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பூர்வீக வைகை கடைமடை பாசன பகுதியான மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான எக்டேரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆடிப்பட்டத்தின் போது இப்பகுதியில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது சமப்படுத்தி மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வைகை அணையில் தற்போது 63 அடி வரை நீர் இருப்பு உள்ளதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கடைமடை விவசாய பாசன பகுதிகளான மானாமதுரை மற்றும் இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு அணையிலிருந்து உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பூர்வீக வைகை பாசன கடைமடை பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆடிப்பட்டத்தின் போது ஏராளமான விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வைத்துள்ள நிலையில் பருவ மழை தாமதமாகிறது.
இந்த வருடம் பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகை பாசன கடைமடை பகுதிகளுக்கு உரிய தண்ணீரை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மதுரை அருகே உள்ள விரகனுார் மதகணையிலிருந்து மானாமதுரை அருகே வேதியரேந்தல் மதகணை வரை பல இடங்களில் கருவேல மரங்களும் நாணல் செடிகளும் வளர்ந்துள்ளதால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் சீரான முறையில் தண்ணீர் செல்வதற்கு இச்செடிகள் தடையாக இருக்கும் என்பதால் உடனடியாக கருவேல மரங்களையும் செடிகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.