/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தியில் கரும்பு வயலில் தீ
/
திருப்பாச்சேத்தியில் கரும்பு வயலில் தீ
ADDED : ஜன 28, 2024 06:41 AM

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் ஒவ்வொரு வருடமும் கரும்பு தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டு வருவதால் விவசாயத்தையே கை விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். படமாத்துார் சர்க்கரை ஆலையை நம்பி திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிரிடப்படுகிறது.
சர்க்கரை ஆலை மூலம் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று ஏக்கருக்கு 30 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கரும்பு பயிரிடப்படுகிறது. பயிரிடப்பட்டு 10வது மாதத்தில் இருந்து கரும்பு அறுவடை செய்ய சர்க்கரை ஆலை அனுமதி வழங்கும்.
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயை ஒட்டி விவசாயிகள் 100 ஏக்கரில் கரும்பு தொடர்ச்சியாக பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக வயல்களில் ஈரம் காயாததால் அறுவடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நேற்று மதியம் வீசிய காற்று காரணமாக மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீப்பொறி பறந்து கரும்பு தோகையில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து கரும்பு வயல் இருப்பதாலும் காற்று வீசியதாலும் அனைத்து பக்கங்களிலும் தீ பரவியது. தீயை அணைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை.
விவசாயி செல்வம்: ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் கரும்பு வயலில் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வருடம் பிப்ரவரியில் தீ பிடித்தது, இந்த வருடம் ஜனவரியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு செல்கின்றனர், ஆனால் இழப்பீடு எதுவும் இன்று வரை வழங்க வில்லை.
நாகசுந்தரம் கூறுகையில்: ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் பத்து மாதங்களாக தினசரி தண்ணீர் பாய்ச்ச உரம் வைக்க என உழைப்பும் தீயில் எரிந்து விட்டது. காப்பீடு குறித்த எந்த விஷயத்தையும் அதிகாரிகள் அறிவுறுத்துவதில்லை. ஏற்கனவே கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நிலையில் வருடம்தோறும் ஏற்படும் தீ விபத்தால் மேலும் குறைய வாய்ப்புண்டு, என்றார்.