UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:09 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் அவசரத்திற்கு மானாமதுரையில் இருந்து வீரர்கள் வந்தும் பயனின்றி உள்ளது.
திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாலை விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்கி விபத்து உள்ளிட்ட எந்த சம்பவத்திற்கும் மீட்பு பணிக்கு 32 கி.மீ., துாரத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து தான் வாகனம் வர வேண்டும். திருப்புவனம் வந்து அதன்பின் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல குறைந்தபட்சம் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயண நேரமாவதால் மீட்பு பணியில் உடனுக்குடன் ஈடுபட முடிவதில்லை.
கோடை காலத்தில் கரும்பு தோட்டங்களில் தீ விபத்து உள்ளிட்ட காலங்களில் மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் உடனுக்குடன் வந்தாலும் அதற்குள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதே போல பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளில் புகுந்து விட்டாலும் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தான் தகவல் கொடுக்கின்றனர். நேற்று திருப்புவனம் புதூரில் மாயாண்டி என்பவரின் வீட்டினுள் பாம்பு புகுந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேரம் தேடியும் பாம்பை கண்டறிய முடியவில்லை.
வீரர்கள் கூறுகையில்,
பொதுமக்கள் அழைத்தால் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
பாம்பை கண்ட உடன் வீட்டின் உரிமையாளர் பயத்தில் வெளியே வந்துவிட்டார். எனவே பாம்பு வந்த வழியே வெளியேறி இருக்க வாய்ப்புள்ளது என்றனர். ஆனாலும் வீட்டு உரிமையாளர் நீண்ட நேரம் வீட்டினுள் செல்லாமல் வெளியிலேயே காத்திருந்தார். தீ விபத்து உள்ளிட்ட காலங்களில் முற்றிலும் எரிந்த பின்னர் தான் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே 1995ல் தீயணைப்பு நிலையத்திற்கு விண்ணப்பித்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் வைகை ஆறு, கண்மாய், வரத்து கால்வாய்களில் தண்ணீர் வரும் , சிறுவர்கள், விவசாயிகள் நீர் நிலைகளில் ஆபத்தை அறியாமல் சென்று சிக்கி கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
