/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடங்கிய வெயிலால் விலை உயர்ந்த இளநீர்
/
தொடங்கிய வெயிலால் விலை உயர்ந்த இளநீர்
ADDED : பிப் 17, 2024 11:08 PM
திருப்புவனம்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பிப்ரவரியிலேயே தொடங்கியதையடுத்து இளநீர் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் கடைசி தொடங்கி ஜூலை வரை வெயிலின் தாக்கம் இருக்கும், இந்தாண்டு பிப்ரவரியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது.
காலை ஏழு மணி முதல் மாலை 6:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமிருப்பதால் பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி தாகத்தை தணித்து கொள்கின்றனர்.
திருப்புவனம் பகுதியில் தென்னை விவசாயம் பெருமளவு செய்தாலும் விவசாயிகள் இளநீரை அறுவடை செய்வதில்லை.
இளநீர் காய்கள் வெட்டிய பின் நான்கு நாட்களில் காய்களின் மேற்புறம் சுருங்கி விடும், எனவே இளநீர் காய்களாக விற்பனை செய்வது கிடையாது.
ஆனால் கேரளா, பொள்ளாச்சி காய்கள் பெரியதாக இருப்பதுடன் ஒரு வாரம் வரை காய்ந்து போகாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் இருந்து இளநீர் காய்கள் மொத்தமாக வாங்கி வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில்: மதுரை மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம், பொள்ளாச்சி காய்களில் 750 மி.லி, முதல் ஒரு லிட்டர் வரை தண்ணீர் இருக்கும் நாட்டு காய்களில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது, இளநீர் காய்களின் தேவை அதிகமிருப்பதால் மதுரை மார்க்கெட்டிலேயே இளநீர் காய்கள் 55 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
வேன் வாடகை, ஏற்றி இறக்க கூலி உள்ளிட்டவைகள் வைத்து 70 முதல் 85 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் இளநீர் காய்களின் விலை 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது, என்றனர்.