/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீ வைப்பு
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீ வைப்பு
ADDED : ஜன 09, 2025 05:11 AM

திருப்புவனம்: திருப்புவனம் புதுாரில் பள்ளி அருகே குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் மாணவ, மாணவியர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். தினசரி பேரூராட்சி சார்பாக எட்டு டன் குப்பை வரை சேகரிக்கப்படுகின்றன. பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டப்பட்டதால் மலை போல குவிந்துள்ளது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட போதிய இடம் இல்லை.
எனவே பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் வைகை ஆறு, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டி தீ வைத்து வருகின்றனர். திருப்புவனத்தில் எங்கு காலியிடம் இருந்தாலும் அதில் குப்பைகளை கொட்டி பேரூராட்சி பணியாளர்கள் தீ வைத்து விடுகின்றனர்.
திருப்புவனம் பைபாஸ் ரோடு, நான்கு வழிச்சாலை. செல்லப்பனேந்தல் விலக்கு உள்ளிட்ட பல இடங்களில் தினசரி குப்பையை கொட்டி தீ வைப்பதால் திருப்புவனம் நகரமே புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. திருப்புவனம் புதுார் பிரமனுார் ரோட்டில் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஆங்கில வழி கல்வி பள்ளி , கால்நடை மருந்தகம், வட்டார வேளாண் அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். கால்நடை மருந்தகம் அருகே உள்ள காலி இடத்தில் குப்பை கொட்டப்பட்டு தினசரி தீ வைத்து வருகின்றனர். புகை மூட்டத்தால் பள்ளி மாணவ, மாணவியர் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் குப்பைகளில் தீ வைப்பதை தடுத்து நிறுத்தி குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

