/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ரோடுகளில் வெட்டப்படும் ஆடுகள்
/
சிவகங்கை ரோடுகளில் வெட்டப்படும் ஆடுகள்
ADDED : டிச 31, 2025 05:30 AM
சிவகங்கை: சிவகங்கையில் அனைத்து தெருக்களிலும் திறந்த வெளியில் வைத்து ஆடுகள் வெட்டப்பட்டு கழிவு அங்கேயே விடப்படுவதால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளை நகராட்சியினர் கண்டு கொள்வதே இல்லை.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள், ரோட்டோரங்களில் ஆடுகளை அறுத்து அங்கேயே விற்பனை செய்கின்றனர். கழிவுகளை அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் விட்டு விடுகின்றனர்.
கடைகள் முன்பு கூட்டமாக காத்திருக்கும் நாய்கள் மோதலில் ஈடுபடுவதால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
தினசரி சந்தை வளாகத்தில் நகராட்சி ஆடு வதை கூடம் உள்ளது. இங்கு ஆடுகளை பரிசோதித்து நோய் பாதித்துள்ளதா என பார்த்த பிறகு அதற்கு சீல் வைத்து வெட்டுவது வழக்கம்.
ஆனால் சிவகங்கை நகராட்சி ஆடுவதை கூடத்தை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான ஆடுகளை ரோட்டில் வைத்து தான் வெட்டுகின்றனர்.
தெருக்களில் அனுமதியின்றி இயங்கும் இறைச்சிக்கடை நடத்துவோர் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

