/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர்களை சேதப்படுத்தும் எலிகள்
/
பயிர்களை சேதப்படுத்தும் எலிகள்
ADDED : டிச 31, 2025 05:30 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் நெற்பயிர்களை கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக வரும் எலிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருப்பாச்சேத்தி, மாரநாடு, மழவராயனேந்தல், தாழிகுளம், வேளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுபணி நடந்து முடிந்துள்ளன.
அண்ணா ஆர் 4, என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ 50, கோ51 உள்ளிட்ட 120 நாள் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மழை காரணமாகவும் வைகை ஆற்றில் நீர்வரத்து காரணமாகவும் கண்மாய்களிலும் நீர் இருப்பு உள்ளது. எனவே பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாற்றங்காலில் இருந்து வயல்களில் நடவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில் நெற்கதிர்கள் பால் பிடிக்க தொடங்கியுள்ளன.
நெற்கதிர்களின் அடிப்பகுதி இனிப்பாக இருப்பதால் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் எலிகள் அவற்றை கடித்து துண்டு துண்டாக்கி விடுகின்றன.
நெல் பயிர்களை கடித்து துண்டாக்குவதுடன் கூட்டமாக வரும் எலிகள் அப்படியே வளைகளுக்குள் இழுத்து சென்று விடுகின்றன.
திடீரென வயல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் நெற்கதிர்களே இருக்காது, தொடர்ச்சியாக எலிகளால் நெல் நாற்றுகள் துண்டிக்கப்படுவதால் நாற்றுகள் காய்ந்து வருகின்றன.
எலிகளுக்கு மருந்து வைத்தாலும் ஒருசில எலிகளே இறக்கின்றன. அதுவும் வயல்களுக்குள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றன.
விவசாயிகள் கூறுகையில், நெல் நாற்றுகளை எலிகள் கூட்டம் கூட்டமாக இரவு நேரத்தில் வந்து கடித்து துண்டாக்கி விடுகின்றன. எலிகளை மருந்து வைத்து அழிக்க முடிவதில்லை.
வயல்களில் ஆங்காங்கே மரக்குச்சிகளில் வைக்கோல், வாழை இலை நார், துணிகளை சுற்றி வைத்து ஸ்டாண்ட் போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம், இரவில் வேட்டையாட வரும் ஆந்தைகள் அதில் அமர்ந்து எலிகளை கொன்று விடும். இதன் மூலம் எலிகள் தொல்லை ஓரளவு குறைந்துள்ளது.

