/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்
/
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்
ADDED : ஜன 09, 2024 11:49 PM

சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 கிளைகளில் ஓடும் 595 பஸ்களில் 37 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பெரிய பாதிப்பில்லை என காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் தெரிவிக்கின்றது. ஆனால், 150 பஸ்கள் வரை ஓடவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 11 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளின் மூலம் புறநகர், டவுன் பஸ்கள் என 595 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
நேற்று முதல் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 15 வது சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி கோட்டத்தின் கீழ் திருப்பூர், கோயம்புத்துார், மதுரை, சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இரு மாவட்டத்திலும் ஓடவேண்டிய 595 பஸ்களில் 558 ஓடுவதாகவும், 37 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை என தெரிவிக்கின்றனர்.
150 பஸ்கள் வரை ஓடவில்லை
அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., தொழிற்சங்க கோட்ட பொது செயலாளர் எஸ்.தெய்வீரபாண்டியன் கூறியதாவது, தொ.மு.ச., சங்க ஊழியர்கள் தவிர்த்து மற்ற அனைத்து சங்க ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வைத்து 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
எங்களை பொறுத்தமட்டில், கோட்டத்தில் ஓடும் 595 பஸ்களில் 150 பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. ஓடிய சில பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்கும், கிளை அலுவலகத்திற்கும் இடையே எடுத்து சென்று, பஸ் இயங்குவது போல் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தொடர்ந்து ஸ்டிரைக் நடத்தினால், ஆட்டோ, வேன் டிரைவர்களை தற்காலிகமாக நியமித்து பஸ்களை ஓட்ட முயற்சிக்கின்றனர். அது முற்றிலும் தவறு.
பயணிகள் உயிர் மீது அரசு விளையாட நினைக்கிறது. விபத்து நேரிட்டால் அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒட்டு மொத்தமாக கண்டக்டர், டிரைவர், டெக்னிக்கல் ஊழியர் என 3,200 பேரில் 50 சதவீத ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.

