/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு; திருப்புவனத்தில் கால்நடை வளர்ப்போர் அச்சம்
/
வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு; திருப்புவனத்தில் கால்நடை வளர்ப்போர் அச்சம்
வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு; திருப்புவனத்தில் கால்நடை வளர்ப்போர் அச்சம்
வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு; திருப்புவனத்தில் கால்நடை வளர்ப்போர் அச்சம்
ADDED : ஜூலை 30, 2025 10:04 PM

திருப்புவனம்; திருப்புவனம் வட்டாரத்தில் கடும் வறட்சி காரணமாக வைக்கோல் கட்டு விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், கொந்தகை, கீழடி, கட்டமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோ 51, என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பரில் பயிரிடப்பட்டு ஜனவரி வரை அறுவடை நடைபெறும். அப்போது வைக்கோல் அதிகம் கிடைக்கும். பசு மாடு, காளை மாடு, எருமை மாடு வளர்ப்பவர்கள் மொத்தமாக வைக்கோல் கட்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்துவார்கள். ஏக்கருக்கு 35 முதல் 40 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும்.
நெல் ரகங்களை பொருத்து இது மாறுபடும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளிடம் வைக்கோல் கட்டுகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொள்வார்கள், திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக சாகுபடி பரப்பளவும் குறைந்து விட்டன. இதனால் வைக்கோல் கட்டுகளும் குறைந்து விட்டன. 35 கட்டு கிடைக்கும் இடத்தில் 20 முதல் 22 கட்டு வரையே கிடைக்கின்றன. கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து தான் அதிகளவு வைக்கோல் கொண்டு செல்கின்றனர். கேரளாவில் தேவை அதிகரித்திருப்பதால் தமிழகத்திலும் வைக்கோல் கட்டு விலை உயர்ந்துள்ளது. ஒரு கட்டு வைக்கோல் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோல் கட்டு மொத்தமாக வாங்கி கேரளாவிற்கு அனுப்புகின்றனர். தமிழகத்தில் 250 ரூபாய் என விற்பனை செய்யப்படும் வைக்கோல் கட்டு கேரளாவில் 500 ருபாய் என விற்பனை செய்யப்படுகிறது. கேரளா வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதால் உள்ளுர் கால்நடை வளர்ப்போர் பரிதவித்து வருகின்றனர்.
ராஜபிரபு, கீழடி: பத்து கறவை மாடு வைத்துள்ளேன், தினசரி ஒரு மாட்டிற்கு தீவனத்திற்கு குறைந்த பட்சம் 200 ரூபாய் வரை செலவாகும், பால் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் செலவு இருந்து கொண்டே இருக்கும். இதுதவிர பத்து மாட்டிற்கும் ஒரு கட்டு வைக்கோல் தேவைப்படும், தற்போது இயந்திரம் மூலம் வைக்கோல் சுருட்டுவதால் நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியாது.எனவே தேவைக்கு ஏற்ப வாங்க வேண்டியுள்ளது. ஒரு கட்டு 100 ரூபாயில் இருந்து 200ரூபாயாக உயர்ந்து விட்டதால் சிரமமாக உள்ளது, என்றார்.
மூர்த்தி, விவசாயி பூவந்தி: கோடை விவசாயத்தில் போதிய லாபம் இல்லை, வேறு வழியின்றி விவசாயம் செய்து வருகிறோம், ஏக்கருக்கு 40 கட்டு வைக்கோல் கிடைக்கும், அதனை இயந்திரம் மூலம் சுருட்ட 40 ரூபாய் கூலி, வியாபாரிகள் எங்களிடம் ஒரு கட்டு 100 ரூபாய் என வாங்கி 250 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மற்ற வியாபாரம் போல் வைக்கோல் கட்டுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாததால் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம், என்றார்.

