/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கொட்ட இடமில்லாமல் சுகாதாரக்கேடு அதிகரிப்பு; உரக்கிடங்கிற்கு இடத் தேர்வு தாமதமாகிறது
/
குப்பை கொட்ட இடமில்லாமல் சுகாதாரக்கேடு அதிகரிப்பு; உரக்கிடங்கிற்கு இடத் தேர்வு தாமதமாகிறது
குப்பை கொட்ட இடமில்லாமல் சுகாதாரக்கேடு அதிகரிப்பு; உரக்கிடங்கிற்கு இடத் தேர்வு தாமதமாகிறது
குப்பை கொட்ட இடமில்லாமல் சுகாதாரக்கேடு அதிகரிப்பு; உரக்கிடங்கிற்கு இடத் தேர்வு தாமதமாகிறது
ADDED : ஏப் 16, 2025 07:53 AM

திருப்புத்துார் பேரூராட்சி வளர்ந்து வரும் நகராகும். நகராட்சி அந்தஸ்திற்காக பல ஆண்டு காத்திருக்கிறது. தற்போது 18 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. தற்போது தினசரி 9 டன் குப்பை சேர்கிறது. விழாக்காலங்களில் இது 10 டன்னுக்கு மேலாக அதிகரிக்கும். ஆனால் 6 முதல் 8 டன் குப்பை மட்டுமே சேகரிக்கும் வசதி தற்போது பேரூராட்சிக்கு உள்ளது.
பேரூராட்சியின் துாய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை தற்போதுள்ள உரக்கிடங்கிலும், இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள கண்மாய் பகுதியிலும் கொட்டப்படுகிறது. இது மட்டுமின்றி இறைச்சிக் கழிவுகளை தனியாரும் கொட்டுகின்றனர். இப்பகுதியில் உள்ள கோர்ட், மின்துறை அலுவலகம், குடியிருப்பு,வணிக பகுதியினர் துர்நாற்றத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதே கண்மாயில் மாடு அடிக்கும் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் துர்நாற்றம் அதிகரிக்கிறது.
சில நேரங்களில் குப்பை தீப்பற்றி புகைமண்டலம் அப்பகுதியை தாக்குகிறது. அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் குப்பைகளிலிருந்து பறந்து வரும் பாலிதீன் குப்பைகளை அகற்றுவது தற்போது கூடுதல் பணியாக உள்ளது. இந்த கண்மாய் மட்டுமின்றி சிவகங்கை ரோட்டில் புதுக்கண்மாய், பாசனக்கால்வாய், ரோடு ஓரங்களில் குப்பை மட்டுமின்றி கழிவுநீரும் கொட்டப்படுகிறது. காரணம் தற்போதைய உரக்கிடங்கில் போதிய இடமின்மையே.
கழிவு நீர் சுத்திகரிப்பிற்காக இடம் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள 60சென்ட் அளவில் உள்ள தற்போதைய உரக்கிடங்கில் சிறிய அளவில் உரம் தயாரிக்க முடிகிறது. இதனால் சுகாதாரக் கேட்டை தடுக்க முடியாமல் பேரூராட்சியே தவிக்கிறது. இதற்கு மாற்றாக 20 ஆண்டுகளாக புதிய உரக்கிடங்கிற்கான இடத் தேடுதல் நடந்து வருகிறது. பல முறை வருவாய்த்துறையினர் ஒதுக்க முன் வந்த இடங்கள் பல காரணங்களால் நின்று போனது. திருப்புத்துார் பேரூராட்சியில் கூடுதலாக அருகிலுள்ள கிராமப் பகுதியும் தற்போது பேரூராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. நகராட்சியாகும் போது மேலும் அருகிலுள்ள சில கிராம குடியிருப்பு பகுதிகளும் சேரும். இதனால் மேலும் குப்பை அதிகரிக்கும். இதனால் அதற்கேற்ப தொலைநோக்குடன் இடத்தை தேர்வு செய்ய பொதுமக்கள் கோரியுள்ளனர்.
தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், அண்மையில் தேர்வு செய்யப்பட்ட 10 ஏக்கர் பரப்பிலான இடம் கோர்ட் வழக்கால் தாமதமாகி வருகிறது. இதனால் வேறு பகுதியிலும் பொருத்தமான இடம் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
செயல் அலுவலர் தனுஷ்கோடி கூறுகையில், கண்மாயில் பேரூராட்சி பணியாளர்கள் குப்பை கொட்டுவதில்லை. இறைச்சி,கோழி,மீன் கழிவு கொட்டாமல் தடுக்க தனியார் வாகனம் மூலம் சேகரித்து கோழித் தீவனம் தயாரிக்குமிடத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மாடு அடிக்கும் வசதி வேறு இடத்தில் அமைக்கவும்,கண்மாய் கரையை உயர்த்தி நடைபாதை அமைக்கவும் மன்றத்தின் மூலம் ஆலோசிக்கப்படும்' என்றார்.
மக்கள் எதிர்ப்பில்லாத இடத்தை தேர்ந்தெடுப்பதில் பேரூராட்சியும், வருவாய்த்துறையினரும் அலட்சியம் காட்டுவதால் புதிய உரக்கிடங்கிற்கான இடம் தேர்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

