/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் முதலீட்டில் அதிக லாபம் சிவகங்கையில் ரூ.58 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் முதலீட்டில் அதிக லாபம் சிவகங்கையில் ரூ.58 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீட்டில் அதிக லாபம் சிவகங்கையில் ரூ.58 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீட்டில் அதிக லாபம் சிவகங்கையில் ரூ.58 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 05, 2025 02:16 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பலரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட் சூசைமாணிக்கம் 38. மூலிகை கடை நடத்தி வருகிறார். 2021 ஜன.13 அன்று அடையாளம் தெரியாத நபர் முகநுாலில் தொடர்பு கொண்டார். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார். அவர் கூறியதை நம்பிய ஆல்பர்ட் சூசைமாணிக்கம் 5 வங்கி கணக்கில் 27 தவணைகளில் ரூ.27 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தினார். பணத்தை பெற்ற அந்தநபர் முதலீடு செய்ததற்கான லாபம் கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆல்பர்ட் சூசைமாணிக்கம் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
*பொறியாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி:
தேவகோட்டை லட்சுமணன் 69. இவர் கேரளாவில் அரசு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு ஜூனில் இவரது வாட்ஸ் ஆப் காலில் பேசியவர் தான் கூறும் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பிய லட்சுமணன் அவர் கூறிய 6 வங்கி கணக்குகளில் 15 தவணைகளில் ரூ.12 லட்சத்து 5 ஆயிரத்தை செலுத்தினார்.அந்த நபர் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. லட்சுமணன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஐ.டி., ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி:
தேவகோட்டை பிரசாத் 33. இவர் கோயம்புத்துாரில் ஐ.டி.,நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஏப்.19ஆம் தேதி ஒரு விளம்பரம் வந்தது. அதை கிளிக் செய்த போது இவரிடம் டெலிகிராமில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். பேசிய நபர் முதலீட்டு ஆலோசகர் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய பிரசாத் 6 வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை. பிரசாத் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதிகாரி போல் பேசி மோசடி:
காரைக்குடி ரமேஷ்பாபு 59. இவரிடம் ஏப்.8ஆம் தேதி சி.பி.ஐ., அதிகாரி போல் ஒருவர் போனில் பேசியுள்ளார். ரமேஷ்பாபுவின் பெயர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், டிஜிட்டல் முறையில் ரமேஷ்பாபுவை கைது செய்வதாகவும் மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவரின் மிரட்டலுக்கு பயந்த ரமேஷ்பாபு அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஏமாந்ததை உணர்ந்த ரமேஷ்பாபு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார்கள் குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.