ADDED : நவ 22, 2024 04:15 AM

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து அடிக்கடி கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொ) சண்முகம் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
நாகூர் மீரா, அ.தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஹிந்துக்கள் பயன்படுத்தும் மயானம் மிகவும் அசுத்தமாகவும்,முட்செடிகள் வளர்ந்து மக்கள் செல்ல முடியாமல், தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது.
செய்யது ஜமீமா தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்த்தப்பட்ட வரியினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பழைய பேரூராட்சி கட்டட வளாகத்தில் வணிக வளாகம்,நூலகம் கட்டாமல் அங்கு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் பொறுப்பு சண்முகம்: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.