/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி
/
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி
ADDED : ஜூன் 19, 2025 02:42 AM

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து முறையாக நடக்க போலீசார் கண்காணிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இளையான்குடியிலுள்ள 18 வார்டுகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இளையான்குடியில் இருந்து ஆர்.எஸ்.,மங்கலம்,பரமக்குடி,சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர் வழியாக பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இளையான்குடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து கண்மாய்க்கரை பஸ் ஸ்டாப்பில் இருந்து மெயின் பஜார் வழியாக பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ரோடு ஒரு வழி பாதையாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்லும் வாகனங்கள் பைபாஸ் ரோடு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதால் தற்போது இளையான்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சிவகங்கை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டும் அதனை மக்கள் முறையாக பயன்படுத்தாமல் இருப்பதால் புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்படுகிறது. கண்மாய் கரை பஸ் ஸ்டாப்பிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதாலும், ஆங்காங்கே பஸ் ஸ்டாப் இல்லாத இடங்களிலும் பயணிகளை ரோட்டில் இறக்கி விடுவதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலும் சரக்கு வாகனங்களை நகருக்குள் அனுமதிப்பதாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
இப்பிரச்னைகளை கண்காணிக்க வேண்டிய டிராபிக் போலீசார் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இளையான்குடியில் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வழிப்பாதையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.