/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மழையால் கண்மாய்கள் நிரம்பின
/
காரைக்குடியில் மழையால் கண்மாய்கள் நிரம்பின
ADDED : அக் 15, 2024 05:16 AM

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை கண்மாய்கள் நிரம்பியுள்ளதோடு நெற் பயிர்களும் தண்ணீரில் மூழ்கி வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில், ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன. காரைக்குடியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 121 கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ், தூர்வாரும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், காரைக்குடி பகுதியில் 15 செ.மீ., வரை கனமழை பதிவான நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குன்றக்குடி, ஆற்காடு, சாலி, நாட்டார், பாதரக்குடி கண்மாய்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ளன.
கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெற்பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில்மூழ்கி வருகிறது. அரியக்குடி, இலுப்பக்குடி, கழனிவாசல், குன்றக்குடி, பாதரக்குடி, தட்டட்டி, கொரட்டி உட்பட பல பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. சாக்கோட்டை மற்றும் கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில், 9 ஆயிரத்து 300 நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய பயிர்களை வேளாண் துணை இயக்குனர் மதுரைச்சாமி தலைமையில் வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். நெல் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரினை வடித்து வடிகால் வசதி அமைக்க அறிவுரை வழங்கினர்.
விவசாயிகள் கூறுகையில், மழைக்காலம் தொடங்கும் முன்பே கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வார ஆண்டுதோறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும்எந்த கண்மாயும் முழுமையாக தூர்வாரப்பட்டதாக தெரியவில்லை. இதனால் போதிய மழை பெய்தும்தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. தண்ணீர் வீணாகி வெளியேறுகிறது.
பல கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் அழிந்து போனது. மழைநீர் அணைக்கும் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாய் தூர்வாராததால், வயல்களில் தண்ணீர் நிரம்பி நெற்பயிர்கள் பாதிப்படைகிறது.