/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ரூ 1.95 கோடியில் அறிவுசார் மையம் துவக்கம்
/
திருப்புத்துாரில் ரூ 1.95 கோடியில் அறிவுசார் மையம் துவக்கம்
திருப்புத்துாரில் ரூ 1.95 கோடியில் அறிவுசார் மையம் துவக்கம்
திருப்புத்துாரில் ரூ 1.95 கோடியில் அறிவுசார் மையம் துவக்கம்
ADDED : ஜன 06, 2024 05:55 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி. ஆண்கள் அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் ரூ.1.95 கோடி மதிப்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் கட்டப்பட்ட அறிவு சார் மையத்தை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.
கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்து பேசுகையில் 'நவீன கட்டடக்கலை. நல்ல காற்றோட்டம், வெளிச்சத்துடன் கட்டப்பட்டுள்ளது.
போதிய வசதி உள்ளதால் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் துவக்க முயற்சி எடுக்கப்படும். தற்போது போட்டித் தேர்வுக்கான நுால்களை படிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையானால் புத்தகங்கள் பேரூராட்சி அல்லது மாவட்ட நிர்வாகம் மூலம் வாங்கப்படும். இங்கு புத்தகங்களை படிக்கலாம், எடுத்துச் செல்ல முடியாது.' என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'அறிவு சார் மையம் ரூ. 1.95 கோடி மதிப்பில் 5200 ச.அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள், கணினி வசதி, கூட்ட அரங்கம் உள்ளது. மாணவர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள இந்த மையம் உதவும். இந்த மையம் படிக்கும் ஆர்வத்தைத் தரும் சூழலுடன் உள்ளது. துாய்மை, அமைதியுடன் பாதுகாக்க வேண்டியது மாணவர்கள் கடமை. ஒரு சமுதாயம் வளர்ச்சி பெற கல்வி அவசியம். அப்போது தான் தன்னிறைவு பெறும் மாநிலமாக உயரும்.' என்றார்.
பேரூராட்சி துணை இயக்குநர் ஜெயகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், செயல் அலுவலர் தனுஸ்கோடி, பொறியாளர் அன்பு செழியன், கவுன்சிலர் கண்ணன், துாய்மை ஆய்வாளர் மணிகண்டன், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.