/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை இழுபறி பொங்கலுக்கு முன் எதிர்பார்ப்பு
/
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை இழுபறி பொங்கலுக்கு முன் எதிர்பார்ப்பு
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை இழுபறி பொங்கலுக்கு முன் எதிர்பார்ப்பு
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை இழுபறி பொங்கலுக்கு முன் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 06, 2024 12:13 AM
சிவகங்கை:தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, மாநில அரசு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை கிடைப்பதில் இழுபறி நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் நிர்வாகத்தின் கீழ் 30 சர்க்கரை ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் ஆண்டு தோறும் விவசாயிகளிடம் 80 முதல் 90 லட்சம் டன் கரும்புகளை கொள்முதல் செய்து, அரவைக்கு அனுப்பும். தமிழக அரசு,ஆலைகளுக்கு கரும்பு வழங்குவதற்காக விவசாயிகளை ஊக்கப்படுத்த ஒரு டன் கரும்புக்கு ரூ.195 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. கரும்பு அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய விவசாயிகளுக்கு இது வரை மாநில அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
இழுபறி
கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி ரகுநாதன், முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் படமாத்துார் சர்க்கரை ஆலைக்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து 3500 விவசாயிகள் 3 லட்சம் டன் கரும்பு வழங்கியுள்ளனர். இவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.4.25 கோடி வழங்க வேண்டும். ஆனால் இது வரை வழங்கவில்லை. இது போன்று மாநில அளவில் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை கிடைக்கப்பெறவில்லை. பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.
நடவடிக்கை
சர்க்கரை துறை கமிஷனர் அலுவலக அதிகாரி கூறியதாவது, தமிழகத்தில் இயங்கும் 30 சர்க்கரை ஆலைகளில் பொதுத்துறை, கூட்டுறவு துறை நடத்தும் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் ஆலைகளுக்கு வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பட்டியலை மாவட்ட கலெக்டர்கள், சர்க்கரை ஆலை நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
மேலும் இதற்கான 'சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன் அவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும், என்றார்.