/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பு
/
கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 10, 2025 05:03 AM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் மஞ்சுளா ரக கரும்புகளையே பயிரிட்டு வந்தனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் புதிய ரக கரும்புகளை ஆய்வு செய்து அதனை பயிரிட தொடங்கினர்.
தற்போது அதிக பிழிதிறன், அதிகளவு மகசூல் கிடைக்கும் 9356, 86032 ரக கரும்புகளையே பயிரிட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. போதிய மழை பெய்துள்ள நிலையில் ஏக்கருக்கு 50 முதல் 55 டன் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
வரும் ஜன 20ம் தேதி முதல் படமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அரவையை தொடங்க உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலையில் படமாத்துார் சர்க்கரை ஆலை மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு நான்காயிரம் டன் அரவை செய்யும் நிலையில் தற்போது மூவாயிரம் டன் வரையே கரும்பு அரவை செய்ய உள்ளனர். கரும்பிற்கு டன் ஒன்றிற்கு மூவாயிரத்து 151 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதில் மாநில அரசின் 215 ரூபாயையும் சேர்த்து டன் ஒன்றிற்கு மூவாயிரத்து 366 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி விவசாயிகள் செலவு செய்கின்றனர். ஏக்கருக்கு 50 டன்னிற்கு மேல் விளைச்சல் கிடைத்தால் தான் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளும் வெல்லம் தயாரிக்கும் கிரஷர்களை கை விட்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பை அனுப்ப தொடங்கியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு பயிரிட மானியம், கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கரும்பு விவசாயத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் நவீன இயந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.