/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்னையை பாதுகாக்க ஆலோசனை உதவி இயக்குனர் தகவல்
/
தென்னையை பாதுகாக்க ஆலோசனை உதவி இயக்குனர் தகவல்
ADDED : அக் 25, 2025 04:21 AM
சிவகங்கை: வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் பலத்த காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது குறித்து காளையார்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் வடிவேல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 9300 எக்டேரில் 9.30 லட்சம் தென்னை மரங்களை விவசாயிகள் வளர்த்து, பலன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சிங்கம்புணரி, திருப்புவனம், காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை உள்ளது.
தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவ மழை காலங்களில் தென்னை மரங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும். அப்படி நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி, வேர் அழுகல் நோய் ஏற்படலாம். இதனால் மகசூல் பாதிக்க கூடும்.
இதை சரி செய்ய வட்ட பாத்தி கட்டி மூடாக்கு (பள்ளம்) அமைத்து கிடைக்கும் நீரை நிலத்தடி நீராக சேமிக்கலாம். அதில் காய்ந்த மட்டைகள், மட்டை துாள்கள், தேங்காய் மட்டைகளை போட்டு வைக்கலாம். இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்படும்.
மழை காலத்தில் மரத்திற்கு அருகே ஆழமாக உழவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் வேர்கள் காயப்பட்டு, நோய் தாக்குதல் ஏற்படலாம். இந்த நேரங்களில் அதிக காற்று அடித்தால், மரங்கள் சாய வாய்ப்புண்டு. மரத்தின் அடித்தண்டில் தொடர்ந்து ஈரமாக இருந்தால் பூஞ்சை மற்றும் பாசி வளர்ந்துவிடும்.
இதுபோன்ற பூஞ்சை, பாசியை அகற்றிவிட்டு, சுண்ணாம்பு அடித்து விட வேண்டும். மழை காலத்தில் உதிர்ந்த மட்டைகளை மரத்திற்கு அடியில் கிடந்தால் அழுகி நோய் மற்றும் வண்டு தாக்குதல் ஏற்படலாம்.
தினமும் வெளியாகும் வானிலை அறிக்கையை அறிந்து கொண்டு தென்னை மரத்தில் காய்கள் பறிக்கலாம். காற்று, மழை காலங்களில் மரம் ஏறுவதை தவிர்க்கவும்.மரங்களை காப்பீடு செய்து பயன் பெறலாம், என்றார்.

