/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி
/
குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி
ADDED : ஜூலை 03, 2025 03:22 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் உயிரிழந்ததற்கு இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட வருடமாக காலியாக இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.
மானாமதுரை உட்கோட்டத்தில் குற்றப்பிரிவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் இருக்க வேண்டும். ஆறு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட திருட்டு, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிப்பார்கள். மானாமதுரை உட்கோட்டத்தில் பல ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. எஸ்.ஐ.,யாக இருந்தவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். போலீசார் மட்டும் தான் திருட்டு வழக்குகளை விசாரிக்கின்றனர். எந்தவித வழிகாட்டுதல்களும் இன்றி போலீசார் இஷ்டத்திற்கு செயல்படுவதால் தான் அஜித்குமார் உயிரிழந்தது போல சம்பவம் நடைபெறுகிறது. குற்றப்பிரிவு போலீசார் யாரை வேண்டுமானாலும் வேனில் ஏற்றி 2 நாட்கள் வைத்து கூட விசாரிப்பது, யாரிடமும் அனுமதி கேட்பதும் இல்லை. பல முறை விசாரணை என்ற பெயரில் வேனில் சந்தேகப்படும் படி உள்ளவர்களை ஏற்றி கொண்டு வலம் வந்துள்ளனர். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இருந்திருந்தால் இந்த அளவிற்கு நடந்திருக்காது. தமிழகம் முழுவதும் தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மானாமதுரை உட்கோட்டத்தில் திருட்டு சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு சுமையாக இருக்க வாய்ப்புள்ளது எனவே மானாமதுரை குற்றப்பிரிவிற்கு இன்ஸ்பெக்டர், எஸ். ஐ.,க்கள் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.