/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடு கட்ட பிளான் அப்ரூவலுக்கு பணம் வசூலா
/
வீடு கட்ட பிளான் அப்ரூவலுக்கு பணம் வசூலா
ADDED : ஜன 01, 2025 07:19 AM

மானாமதுரை :  வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவலுக்கு முறைகேடாக யாரும் பணம் வாங்கவில்லை என நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி விளக்கம் அளித்தார்.
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி(தி.மு.க.,) தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் பாலசுந்தரம் (தி.மு.க.,) வரவேற்றார். நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., கவுன்சிலர் முனியசாமி (எ)நமகோடி: அரசகுழி மயானத்தில் குப்பை கிடங்கு இருந்த இடத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி வருவதை கைவிட வேண்டுமென எதிர்ப்பு தெரிவித்து  கூட்டரங்கில் போராட்டம் நடத்தினார்.
அவருக்கும்  நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பா.ஜ.,கவுன்சிலர் நமகோடி (எ) முனியசாமி வெளிநடப்பு செய்தார்.
நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் இடத்தில் தற்போது குப்பை கிடையாது.முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முழுமையாக  சோதனை செய்த பிறகு அங்கு தொட்டி கட்டப்பட்டு வருகிறது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
புருஷோத்தமன், காங்., கவுன்சிலர், சதீஷ்குமார், தி.மு.க., கவுன்சிலர்: மானாமதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத காரணத்தினால்  நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி பொறியாளர் பட்டுராஜன்: கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தெய்வேந்திரன், அ.தி.மு.க., கவுன்சிலர்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்ட பிளான் அப்ரூவல் வாங்க வருபவர்களிடம் முறைகேடாக பணம் கேட்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தலைவர் மாரியப்பன் கென்னடி (தி.மு.க.,): நகராட்சியில் பிளான் அப்ரூவலுக்காக யாரும் முறைகேடாக பணம் வாங்குவது கிடையாது என்றார்.
கூட்டத்தில் மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

