/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுக்கண்மாய் நிறைந்தும் பயனில்லை
/
புதுக்கண்மாய் நிறைந்தும் பயனில்லை
ADDED : அக் 16, 2024 05:48 AM

திருப்புத்துார் அருகே உள்ளது என்.புதுார். இக்கிராமத்தினர் இப்பகுதியில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி செய்கின்றனர். இவர்களுக்கு புதுக்கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போது 100 ஏக்கரில் நாற்று நட்டுள்ளனர்.
தொடர் மழையால் புதுக்கண்மாய் பெருகியுள்ளது. ஆனால் இக்கண்மாயின் இரு மடைகளும் துார்ந்து பயனின்றி போய் விட்டது. இதனால் பாசனத்திற்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. கடந்த ஆண்டிலேயே பம்ப்செட் மூலம் நீர் எடுத்தே வயல்களுக்கு பாய்ச்சினர்.
மேலும் நீர்வரத்துக் கால்வாய்க்கான புதுக்கோட்டை ரோட்டிலுள்ள பாலம் முற்றிலும் துார்ந்து போனதால் பயனின்றி உள்ளது. தற்போது கண்மாயிலிருந்து நீர் எடுக்க இந்த கால்வாயை பயன்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் தற்காலிக மடை ஏற்படுத்த கோரியுள்ளனர்.
மேலும் இக்கண்மாய்க்கு குயவன் கண்மாயிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பால் கண்மாய் பெருகி கரையிலிருந்து வெளியேறும் நிலை உள்ளது.
ரோட்டை ஒட்டியுள்ள இக்கரையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டியதில் பலவீனமாகி உள்ளது. இதனால் இப்பகுதி கரையையும், நீர்வரத்துக் கால்வாய் பகுதி கரையையும் பலப்படுத்த கிராம மக்கள் கோரியுள்ளனர்.
இந்திராநகர், செல்வி கூறுகையில், கண்மாயில் நீர் அதிகரிப்பதால் எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 40 வீடுகள் நீரில் மூழ்கும் நிலை உள்ளது.
நேற்று வீடுகளில் நீர் புகுந்து பாம்பு கூட வந்து விட்டது.' என்றார். என்.புதுார் அழகர் கூறுகையில், 'புதிய மடைகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். தற்போது தற்காலிக தீர்வாக தற்காலிக மடை ஏற்படுத்தினால் நீர் பாய்ச்ச வசதியாக இருக்கும்' என்றார்.
என்.புதுார் நாகராஜன் கூறுகையில், நீர்வரத்துக்கால்வாயில் நீரை வெளியேற்ற முயற்சி செய்தோம். பாலத்தில் துாம்பு துார்ந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் துார்ந்து போன துாம்பை சீரமைக்கவும், பாலத்தை புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாகும்.' என்றார்.
ஊராட்சி ஒன்றியத்தினர் கூறுகையில், புதுக்கண்மாயில் நீர் அதிகரிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்கண்மாயில் அடுத்த நிதியாண்டில் மடைகள் புதுப்பிக்கப்படும்.
திருப்புத்துார் ஒன்றிய கண்மாய்களில் 70 சதவீதம் நீர் உள்ளது. பிள்ளையார்பட்டி கண்மாய் மட்டும் பெருகியுள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாக்கு பை, சவுக்கு கம்பு, எம்.சாண்ட், மரம் அறுக்கம் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. ஊராட்சிக்கு 2 மண் அள்ளும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.' என்றனர்.